ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கன்னியாகுமரி வருகிறார் 1,500 போலீசார் குவிப்பு


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கன்னியாகுமரி வருகிறார் 1,500 போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 24 Dec 2019 11:00 PM GMT (Updated: 24 Dec 2019 7:56 PM GMT)

விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கன்னியாகுமரி வருகிறார்.இதனால் அங்கு 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் கடலின் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. மண்டபத்தின் 50-வது ஆண்டு பொன்விழா, இந்த வருடம் முழுவதும் கொண்டாட விவேகானந்த கேந்திரா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும் பொன்விழா நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நாளை (வியாழக்கிழமை) நடத்தப்படுகிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (புதன்கிழமை) கன்னியாகுமரி வருகிறார். இதற்காக இன்று மதியம் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரம் வரும் அவர், பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். தொடர்ந்து தனி படகு மூலம் கடலில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார். இரவு அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

1,500 போலீசார் பாதுகாப்பு

இதையடுத்து நாளை காலை 9.30 மணிக்கு விவேகானந்த கேந்திரா ஏக்நாத் ரானடே அரங்கில் நடைபெறும் விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசுகிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கன்னியாகுமரியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய், மெட்டல் டிெடக்டர் மூலமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் அதி நவீன படகு மூலம் கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்து செல்கிறார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கன்னியாகுமரி விடுதிகளில் சந்தேகப்படும் படியாக யாரும் தங்கி உள்ளார்களா? என்றும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

Next Story