விருத்தாசலம் அருகே, ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு வாலிபர் கொலை - 4 நண்பர்கள் கைது


விருத்தாசலம் அருகே, ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு வாலிபர் கொலை - 4 நண்பர்கள் கைது
x
தினத்தந்தி 24 Dec 2019 10:45 PM GMT (Updated: 24 Dec 2019 8:29 PM GMT)

விருத்தாசலம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு வாலிபரை கொலை செய்த 4 நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம், 

ஒடிசா மாநிலம் உடிட் நகரை சேர்ந்தவர் ஆகாஸ்தாஸ் (வயது 22). இவரும், அதே பகுதியை சேர்ந்த ஜிஜேந்திர கிரி (26), சுக்ரதேவ் (50), அனில்குமார் ஹாஜா (33), ‌ஷாட்டி (23) ஆகியோரும் நண்பர்கள். மதுரையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்த, இவர்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் சென்னை தாம்பரத்துக்கு வந்த அவர்கள் 5 பேரும் சென்னை தாம்பரம்-நெல்லை சுவேதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுரைக்கு புறப்பட்டனர்.

அந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு வந்தபோது, ஆகா‌‌ஷ்தாசுக்கும், அவருடன் வந்த 4 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே அந்த ரெயில் இரவு 9 மணிக்கு விருத்தாசலம் அருகே சாத்துக்கூடல் மேல்பாதி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜிஜேந்திர கிரி உள்பட 4 பேரும் சேர்ந்து ஆகா‌‌ஷ்தாசை ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் கூச்சலிட்டபடி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். இதையடுத்து ரெயிலில் இருந்த போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட ஆகா‌‌ஷ்தாஸ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.

இதையடுத்து ஜிஜேந்திர கிரி உள்பட 4 பேரும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்தனர். இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் ரெயில்வே இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)அம்பேத்கர், சப் -இன்ஸ்பெக்டர்கள் சின்னப்பன், பால்வண்ணநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆகாஸ்தாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து பிடிபட்ட 4 பேரையும் விருத்தாசலம் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கூலி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் ஆகா‌‌ஷ்தாசை மற்ற 4 பேரும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து ஜிஜேந்திர கிரி உள்பட 4 பேரையும் ரெயில்வே போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story