வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார்: அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை


வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார்: அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
x
தினத்தந்தி 25 Dec 2019 4:30 AM IST (Updated: 25 Dec 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகார் தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தினார்கள்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்தேவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவகாமி மாதேஸ். இவர் தளி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் 24-வது வார்டில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்தேவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பசவராஜ் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க லட்சக்கணக்கான ரூபாயை பதுக்கி உள்ளதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து கிராம பொதுமக்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பசவராஜ் வீட்டை முற்றுகையிட்டனர். மேலும் வீட்டை பூட்டி வைத்தனர்.

அதிகாரிகள் சோதனை

இதுகுறித்து கிராம மக்கள் வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசாருக்கு புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் பசவராஜ் வீட்டின் வெளியே கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். இந்தநிலையில் அவரது வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என அறிய தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் சேலம் வருமானவரித்துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மாலை பசவராஜ் வீட்டிற்கு வந்தனர்.

அவர்கள் சுமார் 2 மணி நேரம் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் சோதனை நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story