சூரிய கிரகணம் வானியல் பயிற்சி


சூரிய கிரகணம் வானியல் பயிற்சி
x
தினத்தந்தி 25 Dec 2019 3:15 AM IST (Updated: 25 Dec 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் சூரிய கிரகணம் பற்றி மாணவர்களுக்கு வானியல் பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் ஐசக் நியூட்டன் அறிவியல் மன்றம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வளைய சூரிய கிரகணம் குறித்து வானியல் நிகழ்வு பயிற்சி மாணவர்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஆசிரியர் சுவாமிதாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். பயிற்சியில் மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சூரிய கண்ணாடி மற்றும் கையேடு வழங்கப்பட்டது. சூரியகண்ணாடி பயன்படுத்தும் முறை குறித்து பள்ளி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெரோம் பயிற்சி அளித்தார்.

அப்போது நாளை (வியாழக்கிழமை) வளைய வடிவ சூரிய கிரகணம் வானில் தோன்றுகிறது. இந்த சூரியக்கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. இந்த பிரத்தியேக கண்ணாடியை கொண்டு தான் பார்க்க வேண்டும். மேலும் இந்த கண்ணாடியை கைகளால் தொடவோ, துடைக்கவோ கூடாது. 10 நொடிகளுக்கு மேல் தொடர்ந்து சூரியனை பார்க்கக்கூடாது. அறுவை சிகிச்சை செய்து கொண்ட கண்களால் பார்க்கக் கூடாது என்று அறிவுரை கூறினார்.

அதனை தொடர்ந்து பள்ளி ஐசக் நியூட்டன் அறிவியல் மன்றம் ஆசிரியர் நிஷா பெர்னாண்டஸ், ஆசிரியர் செந்தில்வடிவேலன் ஆகியோர் பேசும்போது, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது ஏற்படும் நிழல் தான் கிரகணங்கள் ஆகும். இது ஒரு இயற்கை நிகழ்வு. சூரிய கிரகணம் ஓர் ஆண்டில் 4 அல்லது 5 முறை ஏற்படும், ஆனால் அதனை நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க இயலாது. 1 அல்லது 2 மட்டுமே நம்மால் பார்க்க முடியும். மற்றவை கடல், மலைகள், மனிதர் இல்லாத இடங்களில் தான் தெரியும். ஆகையால் தான் சூரிய கிரகணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நாளை காலை 8.07 மணி முதல் 11.18 மணி வரையிலும் சுமார் 3 மணி நேரத்துக்கும் அதிகமாக இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் வளைய சூரிய கிரகணம் ஊட்டி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தெரியும். மற்ற இடங்களில் பகுதியாக சூரிய கிரகணம் தெரியும். ராமநாதபுரம் மாவட்டத்தில் வடக்கு பகுதியில் முழுமையாகவும், பிற பகுதியில் பகுதியாகவும் தெரியும். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கிராமப்புற மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் 1000 கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தின்போது சாப்பிடக்கூடாது, சமைக்கக்கூடாது, கர்ப்பிணி பெண்கள் பார்க்கக்கூடாது, கிரகணம் முடிந்தவுடன் குளிக்க வேண்டும் என்ற மூடநம்பிக்கைகளை நம்ப வேண்டாம் என்று மாணவர்களுக்கு விளக்கினர். நிகழ்ச்சியில் முதுநிலை அறிவியல் ஆசிரியர்கள் திருமூர்த்தி, ரீனா தாஸ், மாரியம்மாள், மற்றும் ஆசிரியர்கள் சாம்ராஜ், லதா, சோமு, கதிர்மணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஜெரோம் மற்றும் தலைமை ஆசிரியர் செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Next Story