வாடிப்பட்டி அருகே, ஓட்டலுக்குள் லாரி புகுந்தது; மூதாட்டி பலி - 5 பேர் படுகாயம்


வாடிப்பட்டி அருகே, ஓட்டலுக்குள் லாரி புகுந்தது; மூதாட்டி பலி - 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 24 Dec 2019 11:00 PM GMT (Updated: 24 Dec 2019 9:15 PM GMT)

வாடிப்பட்டி அருகே கடைக்குள் லாரி புகுந்ததில் மூதாட்டி பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

வாடிப்பட்டி, 

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி பேட்டைபுதூரை சேர்ந்தவர் பலராமன் (வயது 55). இவர் திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலையின் அணுகு சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் சந்திரசேகரன் (65), வாசுகி(55), ராஜம்மாள்(50), கார்த்திக்(25) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.

இந்த ஓட்டலின் அருகில் அதே பகுதியைச் சேர்ந்த பாலகுருவன் என்பவரது மனைவி சீதாலெட்சுமி(75) மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார்.

நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு கல்லடிபட்டியில் உள்ள டிராக்டர் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து டிராக்டர்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு கன்டெய்னர் லாரி சென்றது. அந்த லாரியை நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் (23) என்பவர் ஓட்டிவந்தார். அந்த லாரி குலசேகரன்கோட்டை பிரிவில் வந்தபோது திடீர் என்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தார்ச் சாலையிலிருந்து இறங்கி சேவைச்சாலையில் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது.

உடனே ஓட்டலில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினார்கள். மேலும் அங்கு எண்ணெய் டப்பாக்களுடன் உட்கார்ந்து இருந்த சீதாலெட்சுமி மீது லாரி மோதி ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்தில் ஓட்டலின் முன் பகுதியில் போடப்பட்டிந்த கூரை சரிந்து விழுந்தது. இதில் ஓட்டல் அதிபர் பலராமன், தொழிலாளிகள் சந்திரசேகரன், வாசுகி, ராஜம்மாள், கார்த்திக் ஆகிய 5 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜம் புஷ்பம், சப்-இன்ஸ்பெக்டர் உமா மகேஷ்வரி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story