25 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து எம்.எல்.ஏ., அதிகாரிகளை ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுகை


25 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து எம்.எல்.ஏ., அதிகாரிகளை ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 24 Dec 2019 11:00 PM GMT (Updated: 24 Dec 2019 9:30 PM GMT)

அரியாங்குப்பத்தில் அரசு விழாவின்போது எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகளை ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியாங்குப்பம்,

புதுச்சேரி அரசு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் தேசிய நுகர்வோர் தின விழா அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி தலைமை தாங்கினார். துறை அலுவலர் முரளிதரன் வரவேற்றார். கூடுதல் செயலாளர் மற்றும் இயக்குனர் வல்லவன் சிறப்புரையாற்றினார்.

"இந்திய நுகர்வோருக்கான திருப்புமுனை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்-2019" என்ற தலைப்பில் புதுச்சேரி தன்னார்வ நுகர்வோர் அமைப்பின் சார்பில் வக்கீல் விமல் பேசினார்.

புதுச்சேரி தேசிய தகவலியல் மையத்தின் மாநில அதிகாரி சுக்லா வாழ்த்திப் பேசினார். பல்வேறு தன்னார்வ அமைப்புகளுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப் பட்டது. விழா முடிவில் உதவி இயக்குனர் பாஸ்கர் நன்றி கூறினார்.

முற்றுகையிட்டனர்

முன்னதாக விழாவில் கலந்து கொள்ள தொகுதி எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி அங்கு வந்தார். அப்போது திருமண நிலையத்தின் வெளியே கூடியிருந்த 100-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் அவரை வழிமறித்து முற்றுகையிட்டனர். புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதி முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 மாதங்களாக ஊதியம் வழங்காததால் எங்கள் குடும்பம் வறுமையில் தவிக்கிறது. எனவே காலம் தாழ்த்தாமல் நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். ரேஷன் கடைகள் மூலமாக குடிமைப் பொருட்கள் வழங்க வேண்டும். இல்லையென்றால் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்று ஏற்பாடாக, அரசு துறையில் வேலை வழங்க வேண்டும் என்றனர்.

தரையில் அமர்ந்து தர்ணா

அவர்களை சமாதானம் செய்த எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி, விழா மண்டபத்திற்குள் அழைத்துச் சென்றார். அங்கு விழா நடைபெற்று கொண்டிருந்தபோது ரேஷன்கடை ஊழியர்கள் திடீரென மேடையின் முன்பு வந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் மேடை மீது ஏறிய அவர்கள் துறை இயக்குனர் வல்லவனிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. பேசும்போது, ‘‘ரேஷன் கடைகளில் அரிசி போட வேண்டும் என்பது தான் எங்கள் அரசின் விருப்பம். ஆனால் கவர்னர் கிரண்பெடி தடுக்கிறார். அரிசிக்கு பதில் அதற்கான பணத்தை வங்கியில் செலுத்தும்போது முழுமையாக பயனாளிகள் கைக்கு சென்று சேருவதில்லை. இதனால் அனைத்து தரப்பு மக்களும் சிரமப்படுகிறார்கள். துறை அதிகாரிகள்தான் இந்த பிரச்சினைக்கு நல்ல முடிவை சொல்ல வேண்டும்’’ என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

பரபரப்பு

அப்போது துறை இயக்குநர் வல்லவன், உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இருப்பினும் அதனை ஏற்காத ரேஷன் கடை ஊழியர்கள் பலர் விழாவை புறக்கணித்து பாதியிலேயே வெளியேறினர்.

தொடர்ந்து அங்கிருந்த ரேஷன் கடை ஊழியர்களை அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் வெளியேற்றினர். இதனால் அரசு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது


Next Story