அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பிரித்து அனுப்பும் பணி


அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பிரித்து அனுப்பும் பணி
x
தினத்தந்தி 26 Dec 2019 4:30 AM IST (Updated: 25 Dec 2019 8:07 PM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.

அரியலூர்,

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மையத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ள வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 113 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 201 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 1,662 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 30-ந் தேதி இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மொத்தம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 976 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் அரியலூர், திருமானூர் மற்றும் செந்துறை ஆகிய ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாக நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள தேர்தலுக்கு, அரியலூர் ஒன்றியத்திற்கு 168 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 387 வாக்குப்பதிவு பெட்டிகளும், திருமானூர் ஒன்றியத்திற்கு 190 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 449 வாக்குப்பதிவு பெட்டிகளும், செந்துறை ஒன்றியத்திற்கு 164 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 381 வாக்குப்பதிவு பெட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

72 வகையான பொருட்களும்...

இரண்டாம் கட்டமாக வருகிற 30-ந் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு, ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு 180 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 412 வாக்குப்பதிவு பெட்டிகளும், தா.பழூர் ஒன்றியத்திற்கு 157 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 382 வாக்குப்பதிவு பெட்டிகளும், ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு 158 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 403 வாக்குப்பதிவு பெட்டிகளும் என மொத்தம் 1,017 வாக்குச்சாவடிகளுக்கு 2,414 வாக்குப்பதிவு பெட்டிகளும் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்களிப்பு மறைப்பு அட்டை, வரைபட குண்டூசிகள், தாள் முத்திரை, ஒட்டுப்பசை, முத்திரை அரக்கு, முகப்புசீட்டு, முகவரி அட்டை, உலோக முத்திரை, கித்தான் பை, பட்டிகை அல்லது நாடா, வெள்ளை நூல், கோணிப்பைகள், வாக்குச்சீட்டு, வாக்குச்சாவடி அடையாள குறி முத்திரை, கைமை போன்ற 72 வகையான பொருட்களும் போலீசார் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) பாலாஜி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, காவல்துறையினர், வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story