பெரம்பலூரில் கிறிஸ்துமஸ் பெருவிழா தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


பெரம்பலூரில் கிறிஸ்துமஸ் பெருவிழா தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 26 Dec 2019 4:00 AM IST (Updated: 25 Dec 2019 8:52 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள புனித பனிமயமாதா திருத்தலத்தில், கிறிஸ்துமஸ் பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அதன் பிரார்த்தனை கூடம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு 11.45 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இரவு 12 மணிக்கு, பங்குதந்தை இயேசு கிறிஸ்து பிறந்துள்ளதன் அடையாளமாக திருத்தலத்தில் இருந்து ஒரு குழந்தை பொம்மையை பிரார்த்தனை செய்து கூடத்திற்கு வெளியே எடுத்துவந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடிலில் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஏசு கிறிஸ்து பிறப்பின் மேன்மைகளை கூறும் பாடல்கள் இசைக்கப்பட்டன. உலகில் சமத்துவம், சகோதரத்துவத்திற்காக ஏசு கிறிஸ்து ஆற்றிய நற்செயல்கள் குறித்து விளக்கப்பட்டது. பின்பு திருப்பலி நள்ளிரவு 1 மணி வரை தொடர்ந்து நடந்தது. இதில் பெரம்பலூர் மறைவட்ட முதன்மை பங்கு குரு ராஜமாணிக்கம் தலைமை தாங்கி, கிறிஸ்துமஸ் குடிலை திறந்து வைத்து சிறப்பு திருப்பலியை நடத்தி வைத்தார். இதில் பனிமாதா தேவாலய பங்கு உறுப்பினர்கள், கிறிஸ்தவ கன்னிகையர், கத்தோலிக்க சங்க நிர்வாகிகள், இளைஞர் மன்ற நிர்வாகிகள், நகர்ப்புற மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் மற்றும் திரளான பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு பிரார்த்தனை

இதேபோல பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. திருத்தலத்திலும், பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள டி.இ.எல்.சி. தூய யோவான் திருத்தலத்திலும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பாளையத்தில் உள்ள 160 ஆண்டு பழமையான புனித சூசையப்பர் தேவாலயம், அன்னமங்கலம், கவுல்பாளையம், எசனை, தொண்டமாந்துறை, பாத்திமாபுரம், நூத்தப்பூர், திருவாலந்துறை, வடக்கலூர், எறையூர்சர்க்கரைஆலை, திருமாந்துறை, செட்டிகுளம், பாடாலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.


Next Story