தாளவாடி அருகே காரில் சென்ற சுயேச்சை வேட்பாளரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி


தாளவாடி அருகே காரில் சென்ற சுயேச்சை வேட்பாளரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி
x
தினத்தந்தி 26 Dec 2019 4:17 AM IST (Updated: 26 Dec 2019 4:17 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே காரில் சென்ற சுயேச்ைச வேட்பாளரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தார்கள்.

தாளவாடி,

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 30-ந் தேதி என 2 நாட்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி வாகனங்களில் உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தாளவாடி அருகே உள்ள திகனாரை பகுதியில் பறக்கும் படை அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது காருக்குள் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காரில் இருந்த 3 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதில் ஒருவர் தாளவாடி அருகே உள்ள எரகனள்ளி கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பதும், அவர் திகனாரை ஊராட்சி தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடுவதும், 3 பேரும் எரகனள்ளியில் இருந்து திகனாரைக்கு சென்றதும் தெரியவந்தது.

காரில் இருந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் ஆரோக்கியசாமியிடம் இல்லை. இதனால் அதிகாரிகள் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து தாளவாடி ஒன்றிய தேர்தல் அலுவலர் பிரேம்குமாரிடம் வழங்கினார்கள். அவர் அந்த பணத்தை சத்தியமங்கலம் சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தார்.

உள்ளாட்சி தேர்தலையொட்டி கடந்த சில நாட்களாக ேவட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் காரில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story