டெல்டா பகுதியில் கொட்டிய மழை: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன - விவசாயிகள் கவலை
டெல்டா பகுதியில் கொட்டிய மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துவிட்டன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில்,
கடலூர் மாவட்டத்தில் காவிரியின் கடைமடை பகுதியாக காட்டுமன்னார்கோவில், குமாராட்சி, சிதம்பரம் பகுதி இருந்து வருகிறது. இங்கு நேரடி நெல் விதைப்பு, நடவு முறையில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில் காவிரி டெல்டா பகுதியில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதனடிப்படையில் நேற்று முன்தினம் இரவில் காட்டுமன்னார்கோவில் பகுதி முழுதும் பரவலாக கொட்டிய கனமழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. அதே நேரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வயலில் சாய்ந்து போனது. இது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனெனில் பருவமழை தீவிரமடைந்து இருந்த காலக்கட்டத்தில், இந்த பகுதியில் உள்ள நெற்பயிர்களை மழைநீர் வெள்ளமென சூழ்ந்து நின்றது. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒரு பகுதி நெற்பயிர்கள் கருப்பாக இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து மழை ஓய்ந்து குளிர் காற்று கடுமையாக வீசியதால் புகையான் நோய் தாக்குதலுக்கும் பயிர்கள் உள்ளானது. இதில் இருந்து பயிர்களை மீட்டு கொண்டுவருவதில் விவசாயிகள் கடுமையான சவால்களை சந்தித்தனர்.
இந்த நிலையில் தற்போது நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராகும் நிலையில், தொடர்ந்து 2 நாட்களாக பெய்து வரும் மழையால் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் அளவிலான பயிர்கள் சாய்ந்து கிடந்து வருகிறது. இவ்வாறு அடிமேல் அடி வாங்கி வருவதால் டெல்டா விவசாயிகள் துவண்டு போய் இருக்கிறார்கள்.
இதுகுறித்து கொள்ளிடம், கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி கூறுகையில், நேரடி நெல் விதைப்பு முறையில் ஜெ.ஜெ.எல்., எல்.என்.ஆர். உள்ளிட்ட ரக நெற்பயிர்கள் குறுகிய கால பயிராகும். அதாவது 120 நாட்கள் காலம் கொண்டவையாகும். இந்த பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட இடங்களில் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராகி வந்தது.
இந்த சூழ்நிலையில் பெய்த மழையால் இப்பயிர்கள் வயலில் சாய்ந்து விழுந்து கிடக்கிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் நெல் மணிகள் மற்றும் வைக்கோலின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். எனவே உடனடியாக அறுவடை செய்து விடலாம் என்று நினைத்தால் கூட சாய்ந்து கிடக்கும் பயிர்களை எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாது.
மேலும் தற்போது உள்ளாட்சி தேர்தல் போன்ற பல்வேறு காரணத்தினால் ஆட்களையும் அழைத்து சென்று அறுவடை செய்ய முடியாத நிலைக்கு டெல்டா விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர் என்று கவலையுடன் அவர் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு முறையும் டெல்டா விவசாயிகள் இதுபோன்ற இயற்கை இடர்பாடுகள், புகையான் நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சம்பா சாகுபடியில் மகசூலை பெற முடியாத நிலைக்கே உள்ளாகி வருகிறார்கள். இந்த முறையாவது மகசூலை எட்டாலம் என்று நினைத்து இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்து இருப்பதுடன், அவரை கவலையடைய செய்துள்ளது.
Related Tags :
Next Story