பெருமாநல்லூர் அருகே, அடிப்படைவசதி செய்து கொடுக்காததால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் அறிவிப்பு
பெருமாநல்லூர் அருகே அடிப்படை வசதி செய்து கொடுக்காததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெருமாநல்லூர்,
பெருமாநல்லூர் அருகே காளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட நியூ குருவாயூரப்பன் நகர், படையப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் முறையான குடிநீர், மின்சார பற்றாக்குறை, ஆரம்ப சுகாதார நிலையம், தார் மற்றும் கான்கிாீட் சாலை வசதி, பஸ் வசதி, சுடுகாட்டுக்கு சாலை வசதி, வார்டு மறுவரையறை போன்ற வசதிகள் நீண்ட நாட்களாகியும் சரி செய்து கொடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக அந்த கிராம மக்கள் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி கிராமமக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பதாகை ஒன்றும் அந்த பகுதியில் வைத்துள்ளனர்.
தேர்தல் புறக்கணிப்பு குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது “நியூகுருவாயூரப்பன்நகர் மற்றும் படையப்பா நகரில் 500 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்” என்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) செல்வராஜ் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் பெருமாநல்லூர் போலீசார், சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு தேவையான வசதிகள் நிறைவேற்றி தரப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பை கைவிடுவதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story