தினம் ஒரு தகவல் : உளவு பார்க்கும் நம் வீட்டு டி.வி.க்கள்


தினம் ஒரு தகவல் : உளவு பார்க்கும் நம் வீட்டு டி.வி.க்கள்
x
தினத்தந்தி 26 Dec 2019 11:48 AM IST (Updated: 26 Dec 2019 11:48 AM IST)
t-max-icont-min-icon

என்னதான் உலகையே கைக்குள் அடக்கும் ஸ்மார்ட் போன்கள் நம்மிடையே வந்துவிட்டாலும் டி.வி.யின் மோகம் மக்களிடம் குறைந்தபாடில்லை. அன்று சீரியல் பார்த்துக்கொண்டிருந்த நாம் இன்று நெட்ப்ளிக்ஸ், அமேசான், ப்ரைமில் ஆங்கில தொடர்கள் பார்க்கும் அளவுக்கு அப்கிரேட் ஆகியுள்ளோம்.

டி.வி.யும் எல்.சி.டி., எல்.இ.டி. தொடங்கி சகல ஆன்-லைன் வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் டி.வி.க்கள் என காலத்திற்கேற்றவாறு தொழில்நுட்பத்தில் வளர்ச்சிகளை கண்டு வருகிறது.

அமெரிக்காவின் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனை நாட்களான பிளாக் ப்ரைடே மற்றும் சைபர் மன்டேவில் இந்த வருடமும் விற்பனை களைகட்டி முடிந்துள்ள நிலையில், தற்போது எப்.பி.ஐ. அமைப்பு வெளியிட்டுள்ள ஓர் எச்சரிக்கை அறிக்கை பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. தற்போது உற்பத்தியாகும் பெரும்பாலான டி.வி.க்கள் இணைய இணைப்பு தொடங்கி பேசியல் ரெகெக்னிஷன் வரை பல திறன்களை கொண்டுள்ளன. இதனால் இணைய வழி ஹேக்கர்களின் ஊடுருவல்களால் ஏற்படும் பாதிப்புகள் ஸ்மார்ட் டி.வி.க்களில் இருக்கக்கூடும் என அந்த அமைப்பு விற்பனை நாளுக்கு முன்பாகவே ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது.

இந்த வகை டி.வி.க்களை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்கள் மற்றும் அதில் பயன்படுத்தப்படும் ஆப்பின் வடிவமைப்பாளர்கள் டி.வி. வழியாக நம்மை எந்த அளவு கண்காணிக்க வாய்ப்புள்ளதோ அதே அளவு இணைய வழி ஹேக்கர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், அடுத்த தலைமுறை டி.வி.க்கள் என விற்பனையாகும் மாடல்களில் இணைய தள இணைப்புக்காக இயக்கப்படும் அதிநவீன மென்பொருள் மற்றும் அதில் உள்ள மைக் ஹேக்கர்கள் நம்மை உளவு பார்க்க ஏதுவாக இருக்கிறது என சைபர் பாதுகாப்பு நிபுணரும், பிரிட்டிஷ் சிக்னல்கள் புலனாய்வு சேவையான ஜி.சி.எச்.கியூவின் முன்னாள் ஆய்வாளருமான மேட் டைட் கூறுகிறார். அத்தகைய ஹேக்கர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளப் பயன்பாட்டாளர்கள் கடைபிடிக்க வேண்டிய எளிய வழிகளை விளக்குகிறது தற்போதைய எப்.பி.ஐ-யின் அறிக்கை.

சேனல்களை மாற்றுவது, நம் வீட்டு குழந்தைகளிடம் வயது மீறிய வீடியோக்களை காட்டுவது என தொடங்கும் ஹேக்கிங் செயல்கள் நம் வீட்டுப் படுக்கையறையில் உள்ள தொலைக்காட்சியின் கேமராக்கள் மற்றும் மைக் வரை செல்லலாம். நம் ஸ்மார்ட் டி.வி. பற்றி அடிப்படை தகவல்களை தெரிந்து வைத்திருப்பது, புதிதாக வாங்கிய டி.வி.க்களில் உள்ள நெட்வொர்க் கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றுவது மற்றும் அக்கருவியில் உள்ள கேமரா, மைக்குகளை ஆன், ஆப் செய்வது ஆகியவற்றை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கான எளிய வழியாக பரிந்துரைக்கிறது எப்.பி.ஐ.

’அப்படி ஆன், ஆப் செய்ய முடியாவிட்டால் கேமரா மீது ஒரு கருப்பு டேப்பை ஒட்டிவிடுவது நல்லது. மேலும், பயன்பாட்டாளர்கள் தங்கள் தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்யும் அப்டேட்டுகளை உடனுக்குடன் செய்துவிடுவது நல்லது. அப்படி புது வெர்ஷன்களை விரும்பாதவர்களுக்கு ஒரு எளிய தீர்வு உள்ளது, தேவையில்லாத நேரங்களில் இணையத்தில் இருந்து உங்கள் டி.வி.யை துண்டித்து விடுங்கள்!‘ என்கிறார் டைட்.எப்படியும் பெரும்பாலானோர் டி.வி.யை ஆன் பண்ணி ஸ்மார்ட்போன் தான் நோண்டப் போகிறோம். அப்படி நீங்க டி.வி. பார்க்கலைனாலும் டி.வி. உங்களை பார்க்கும். அலர்ட்!

Next Story