தமிழகஅரசு ஓய்வூதியர் நல வாரியம் அமைக்க வேண்டும் தர்மபுரியில் நடந்த சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்


தமிழகஅரசு ஓய்வூதியர் நல வாரியம் அமைக்க வேண்டும் தர்மபுரியில் நடந்த சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 27 Dec 2019 4:30 AM IST (Updated: 26 Dec 2019 11:27 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதியர் நலவாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி,

தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் ஓய்வூதியர் தின விழா மற்றும் நிர்வாகிகள் கூட்டம் தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க மாவட்ட தலைவர் வரதன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகி கிரு‌‌ஷ்ணன் வரவேற்றார். சங்கத்தின் மாநில தலைவர் காதர் மீரான், சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி வாரியத்தின் இணை இயக்குனர் ராஜேந்திரன், சங்க மாவட்ட செயலாளர் ரத்தினவேலு, மாவட்ட பொருளாளர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு ஓய்வூதியர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

விழாவில் சங்க மாநில நிர்வாகிகள் சீத்தாராமன், ராகவன், ஆறுமுகம், பக்தவச்சலம், குருவன், ஓய்வுபெற்ற கல்வித்துறை அதிகாரிகள் ஆறுமுகம், நடராஜன், ராஜசேகரன், சுப்பிரமணியன் உள்பட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

நலவாரியம்

இந்த கூட்டத்தில், ஊதியக்குழு நிலுவை தொகையை தாமதமின்றி ரொக்கமாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படியாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்க வேண்டும். ஓய்வூதியர் நல வாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, நிபந்தனையற்ற முழுமையான மருத்துவ காப்பீடு தொகை வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியினை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். 60 வயது நிரம்பிய அனைவருக்கும் அரசு பஸ்களில் சலுகை கட்டணம் வழங்க வேண்டும். மாவட்டந்தோறும் ஓய்வூதியர் இல்லங்களை அரசு ஏற்படுத்தி செயல்படுத்த வேண்டும் என்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கூட்டத்தின் தொடக்கத்தில் 75 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

முடிவில் சங்க துணைத் தலைவர் லட்சுமிகாந்தன் நன்றி கூறினார்.


Next Story