குடிபோதையில் தகராறு குளத்தில் மூழ்கடித்து மீனவர் கொலை - நண்பர்கள் 2 பேர் கைது
திருமலைராயன்பட்டினத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் குளத்தில் மூழ்கடித்து மீனவரை கொலை செய்ததாக அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்,
திருமலைராயன்பட்டினம் பட்டினச்சேரி மாந்தோப்பைச் சேர்ந்தவர் மதி (வயது 32), மீனவர். இவருடைய நண்பர்கள் சுனாமி நகரைச் சேர்ந்த திலீப் (23), அதே பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (42). இவர்கள் 3 பேரும் கடந்த 23-ந் தேதி இரவு, மகத்தோப்பு அருகே உள்ள சாராயக்கடை ஒன்றில், சாராயம் வாங்கிகொண்டு, அருகில் உள்ள குளத்தின் கரையில் அமர்ந்து குடித்துள்ளனர்.
அப்போது, மதி என்பவர், போன வருடம் இதேபோல் சாராயம் குடிக்கும் போது, திலீப் உன் கையில் பாட்டிலை உடைத்து குத்தினான். ஆனால், அவனுக்கு நீ சாராயம் வாங்கி கொடுக்கிறாயே என மூர்த்தியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
அப்போது `திலீப் எனது மருமகன், நாங்க அடித்துக் கொள்வோம். சேர்ந்து கொள்வோம். நீ வாயை மூடிவிட்டு குடி என கூறியதாகவும், இதனால், மதிக்கும், மூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, நம்மை தவறாக பேசிய மதியை சும்மா விடக்கூடாது என, இருவரும் சேர்ந்து, அருகில் இருந்த குளத்தில் மதியை தள்ளிவிட்டுள்ளனர். பின்னர் இருவரும் மதியை குளத்தில் மூழ்கடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது மதி எழுப்பிய கூச்சலை கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இது குறித்து, திருமலைராயன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மதியுடன் சாராயம் குடித்த இருவர் யார் என விசாரித்தபோது, திலீப், மூர்த்தி குறித்த விவரம் தெரிய வந்தது. இதையடுத்து திருமலைராயன்பட்டினம் ரெயில்நிலையம் அருகே நின்ற அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட திருமலைராயன்பட்டினம் போலீசாரை, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்குமார் பன்வால், சூப்பிரண்டு வீரவல்லபன் ஆகியோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story