நல்லம்பள்ளி அருகே கரும்பு தோட்டத்துக்கு தீ வைப்பு மர்ம கும்பலுக்கு வலைவீச்சு


நல்லம்பள்ளி அருகே கரும்பு தோட்டத்துக்கு தீ வைப்பு மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 27 Dec 2019 4:30 AM IST (Updated: 27 Dec 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே கரும்பு தோட்டத்துக்கு தீ வைத்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த சிவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது55), விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் சாகுபடி செய்துள்ளார். தற்போது இந்த கரும்பு பயிர் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.

இந்தநிலையில் நேற்று மாலை 4 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று கரும்பு தோட்டத்துக்கு வந்து பயிருக்கு தீ வைத்து உள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது.

தீ அணைப்பு

இதனை அறிந்ததும் ரவீந்திரன் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். கரும்பு தோட்டத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி தீயணைப்பு வீரர்கள் சென்று கரும்பு தோட்டத்தில் தீயை முழுவதுமாக அணைத்தனர்.

நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிருக்கு மர்ம கும்பல் தீ வைத்துள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story