மாவட்டத்தில் முதல் கட்டமாக 12 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று வாக்குப்பதிவு


மாவட்டத்தில் முதல் கட்டமாக 12 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 27 Dec 2019 4:30 AM IST (Updated: 27 Dec 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 12 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

சேலம்,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 30-ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 299 உள்ளாட்சி பதவிகள் உள்ளன.

இந்த பதவிகளுக்கு மொத்தம் 13 ஆயிரத்து 923 பேர் போட்டியிடுகிறார்கள். வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.

12 ஊராட்சி ஒன்றியங்கள்

இந்த நிலையில் முதல் கட்டமாக இன்று எடப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி மற்றும் ஏற்காடு ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது 17 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், 169 ஒன்றியக்குழு உறுப்பினர், 194 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 1,914 கிராம ஊராட்சி தலைவர் என மொத்தம் 2 ஆயிரத்து 294 பதவிகளுக்கு முதல்கட்டமாக தேர்தல் நடக்கிறது.

முதற்கட்ட வாக்குப்பதிவில் 9 லட்சத்து 41 ஆயிரத்து 935 பேர் வாக்களிக்க உள்ளார்கள். இவர்களுக்கென 1,568 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தபால் வாக்கு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

72 வகையான பொருட்கள்

அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து வாக்குப்பதிவிற்கு தேவையான வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டி, அழியா மை, வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவிற்கான படிவங்கள், கோணிப்பை, எழுதுகோல், சீல் வைக்க பயன்படுத்தப்படும் பொருள் என மொத்தம் 72 வகையான பொருட்கள் வாக்குச்சாவடி வாரியாக நேற்று அலுவலர்களிடம் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்படி எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற பணிகளை கலெக்டர் ராமன் ஆய்வு மேற்கொண்டார். வாக்குப்பதிவு பணியில் 18 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் ஈடுபடுகிறார்கள்.


Next Story