கோவை அருகே கார் மீது லாரி மோதி விபத்து, கேரளாவை சேர்ந்த சிறுவன் உள்பட 4 பேர் சாவு


கோவை அருகே கார் மீது லாரி மோதி விபத்து, கேரளாவை சேர்ந்த சிறுவன் உள்பட 4 பேர் சாவு
x
தினத்தந்தி 27 Dec 2019 4:30 AM IST (Updated: 27 Dec 2019 5:38 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே கார் மீது லாரி மோதி கேரளாவை சேர்ந்த சிறுவன் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

போத்தனூர்,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நல்லேப்பள்ளியை சேர்ந்தவர் விபின் தாஸ் (வயது 43). இவர் தனது குடும்பத்தினருடன் வெளிநாடு செல்வதற்காக ஒரு வாடகை காரில் கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்து கொண்டிருந்தனர். காரில் மீரா (38), ரமேஷ் (50), ஆதிர்ஷா (12), ரிஷிகேஷ் (7), நிரஞ்சன் (11), ஆதிரா (16) ஆகியோர் இருந்து உள்ளனர்.

காரை ராஜா (44) ஓட்டியுள்ளார். கார் கோவை- எல் அண்டு டி பைபாஸ் சாலை வழியாக நேற்று இரவு வந்து கொண்டிருந்தது.

கார் செட்டிப்பாளையம் அருகே உள்ள சோதனை சாவடி அருகே வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியது.

மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் டேங்கர் லாரியும் சாலையில் கவிழ்ந்தது. காரில் இருந்தவர்கள் பயத்தில் அலறினர். விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காரின் பின்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டனர். விபத்தில் காரின் முன்பக்க கதவுகள் வளைந்து விட்டதால், கதவை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் காரில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ரமேஷ், ஆதிர்ஷா, மீரா, ரிஷிகேஷ் ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி இறந்தனர்.

காயம் அடைந்த விபின் தாஸ், நிரஞ்சன், ஆதிரா, ராஜா ஆகியோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், துணை சூப்பிரண்டு பாலமுருகன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்கும் பணியினை விரைவு படுத்தினர். வெளிநாடு செல்வதற்காக வந்த போது 4 பேர் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story