முதல் கட்ட தேர்தல்: 9 ஊராட்சி ஒன்றியங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - கலெக்டர் வரிசையில் நின்று வாக்களித்தார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த முதல் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம், தெள்ளார், பெரணமல்லூர் ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது.
இந்த 9 ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 76 பேரும், 181 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிகளில் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மீதமுள்ள பதவிகளுக்கு 782 பேர் போட்டியிடுகின்றனர்.
அதேபோல் 498 ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவிகளில் 25 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மீதமுள்ள பதவிகளுக்கு 1614 பேர் போட்டியிடுகின்றனர். 3 ஆயிரத்து 480 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 913 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மீதமுள்ள பதவிகளுக்கு 6 ஆயிரத்து 612 பேர் போட்டியிடுகின்றனர்.
முதல் கட்டமாக 1,930 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடந்தது. காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்றபடி வாக்குப்பதிவு செய்தனர். இளைஞர்களும், இளம்பெண்களும் ஆர்வமுடன் ஓட்டுப்போட்டனர். வெளியூர்களில் இருப்பவர்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர்.
வேங்கிக்கால் ஐ.டி.ஐ. அருகில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கே.எஸ்.கந்தசாமி வரிசையில் நின்று வாக்களித்தார். தேர்தல் வாக்குச் சீட்டு முறையில் நடந்தது.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவர்கள் பதவிக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டது. இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டிற்கு இள நீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டது. இந்த வாக்கு சீட்டுகளை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களுக்கு பிடித்த சின்னங்களில் வாக்களித்தனர். பின்னர் அதனை ஒவ்வொன்றாக ஓட்டுப் பெட்டிகளில் போட்டனர்.
126 பதற்றமான மற்றும் 25 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மையங்களில் வெப் கேமரா, வீடியோ கவரேஜ், நுண்பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க போலீசார் மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
மாலை 5 மணி வரையில் வாக்காளர் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். 5 மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பெட்டி மற்றும் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) 2-ம் கட்ட தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து வருகிற 2-ந் தேதி (வியாழக்கிழமை) வாக்குகள் எண்ணப்படுகிறது.
Related Tags :
Next Story