தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வீடுகளில் கருப்புகொடி ஏற்றிய கிராம மக்கள்


தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வீடுகளில் கருப்புகொடி ஏற்றிய கிராம மக்கள்
x
தினத்தந்தி 27 Dec 2019 11:00 PM GMT (Updated: 27 Dec 2019 6:18 PM GMT)

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்காததால் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி காரமடை அருகே கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரமடை,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 27-ந் தேதிமற்றும் நாளை மறுநாள்(திங்கட்கிழமை)ஆகிய 2 கட்டமாக நடக்கிறது.இதில், கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் வெள்ளியங்காடு ஊராட்சியில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழக- கேரள எல்லையில் வனப்பகுதி அருகே வெள்ளியங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட அரக்கடவு, மூணுகுட்டை ஆகிய பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இங்கு 430 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் அரக்கடவு, மூணுகுட்டை ஆகிய 2 கிராம மக்களும் தங்களின் அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோபனாரி பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனால் வனப்பகுதி வழியாக செல்லும் அந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது.

மழை காலங்களில் சேறும் சகதியுமாக மாறுவதால் வாகனங்களில் செல்ல முடிவது இல்லை. இரவு நேரங்கள் வன விலங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே குண்டும் குழியுமான இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், கோபனாரி சாலையை சீரமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தோம். ஆனால் அதற்கு அதிகாரிகள் தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்பட வில்லை. எனவே நாங்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றனர்.

மேலும் அரக்கடவு, மூணுகுட்டை கிராம மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கிராமத்தின் நுழைவுவாயில் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர். மேலும் பேனர் கட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் வனசரக அலுவலர் சுரேஷ், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சாந்தாமணி, வருவாய் அலுவலர் தெய்வ பாண்டியம்மாள் ஆகியோர் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்கள், சாலை அமைக்க சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு ஆய்வறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. வரும் நிதியாண்டில் சாலை போடப்படும் என்று தெரிவித்தனர்.

அதற்கு, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் இதே பதிலை தான் அதிகாரிகள் தெரிவித்தனர். அதை நம்பி நாங்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தோம். ஆனால் சாலை அமைக்க இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சாலை அமைக்கும் உத்தரவு நகலை காட்டினால் மட்டுமே இந்த தேர்தலில் வாக்களிப்போம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனால் கிராமமக்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலை புறக்கணிப்பதாக கிராமமக்கள் அறிவித்து உள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story