தேர்தல் அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாக்காளர்கள்: இரவு 8 மணிவரை நடைபெற்ற வாக்குப்பதிவு


தேர்தல் அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாக்காளர்கள்: இரவு 8 மணிவரை நடைபெற்ற வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 28 Dec 2019 4:32 AM IST (Updated: 28 Dec 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்குளி அருகே வாக்களிக்க தாமதமானதால் தேர்தல் அலுவலருடன், வாக்காளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நடந்தது.

ஊத்துக்குளி,

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2- மாவட்ட கவுன்சிலர் பதவி, 12 ஊராட்சி ஒன்றிய குழு பதவி, 37 பஞ்சாயத்து தலைவர் பதவி, 261 வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 659 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் என கண்டறியப்பட்ட பல்லகவுண்டன்பாளையம், செங்கப்பள்ளி, எஸ்.பெரியபாளையம், முத்தம் பாளையம், முதலிபாளையம் பகுதிகளில் செயல்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் உத்தரவின் பெயரில் ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் ஒவ்வொரு வாக்காளரும் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் என 4 வேட்பாளர்களுக்கு வாக்குச் சீட்டில் வாக்களித்தனர். இதனால் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதேபோல் எஸ்.பெரியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.பெரியபாளையம் மற்றும் பாரப்பாளையத்தில் அமைக்கப்பட்ட இரு வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க காலதாமதம் ஏற்பட்டதால் நீண்டநேரம் காத்திருந்த பொதுமக்கள் தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் கிடைக்கப் பெற்ற ஊத்துக்குளி பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரிகா, தாசில்தார் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், ஆகியோர் விரைந்து வாக்காளர்களை சமாதானப்படுத்தினர். எஸ். பெரியபாளையம் ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. முதலாவது மற்றும் இரண்டாவது வார்டில் உள்ள மொத்தம் 1012 வாக்காளர்களுக்கு பாரப்பாளையம் அரசு பள்ளியிலும், ஐந்து மற்றும் ஆறாவது வார்டில் உள்ள 802 வாக்காளர்களுக்கு எஸ். பெரியபாளையம் அரசு பள்ளியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த 4- வார்டிலும் வாக்காளர்கள் அதிகம் இருந்ததால் ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனி வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இங்கு மாலை 5 மணி வரை வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு வாக்குச்சாவடிகளிலும் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல்லடம் ஒன்றியத்தில் உள்ள 20 கிராம ஊராட்சிகளில் உள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 162 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. அதன்படி நேற்று காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு வாக்காளரும் முறையே 4 வாக்குகள் அளிக்க வேண்டியிருந்ததால் ஒவ்வொரு வாக்காளருக்கும் 5 முதல் 7 நிமிடங்கள் வரை ஆனது. இதனால் பல இடங்களில் 5 மணிக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

பல்லடம் மாணிக்காபுரம் ஊராட்சி ராசா கவுண்டம்பாளையம் வாக்குச்சாவடி எண் 34-ல் மாலை 5 மணிக்கு 152 வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது வாக்களிக்க மிகவும் தாமதம் ஆகிறது என்று கூறி சிலர் கூச்சலிட்டனர். இதையடுத்து அந்தப் பகுதிக்குச் சென்ற பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானம் செய்து வரிசையில் நிற்க வைத்து ஒவ்வொருவராக வாக்களிக்க ஏற்பாடு செய்தனர்.

இதேபோல் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் பல இடங்களில் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படாததால் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க கடும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் தேர்தல் பணிகள் காரணமாக பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக பணி புரியும் திருப்பூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு பல்லடம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் சிகிச்சை பெற்ற பின் மீண்டும் அவர் தனது பணியை தொடர்ந்தார்.


Next Story