திருப்பூர் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தல்: 7 ஊராட்சி ஒன்றியங்களில் 73.84 சதவீதம் வாக்குப்பதிவு


திருப்பூர் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தல்: 7 ஊராட்சி ஒன்றியங்களில் 73.84 சதவீதம் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 28 Dec 2019 4:39 AM IST (Updated: 28 Dec 2019 4:39 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிக்கான முதல் கட்ட தேர்தலில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 73.84 சதவீதம் வாக்குகள் பதிவானது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்டமாக திருப்பூர், ஊத்துக்குளி, காங்கேயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நேற்று நடந்தது. மொத்தம் 122 ஊராட்சிகளில் 784 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடந்தது. இதில் 1,044 கிராம வார்டு உறுப்பினர் பதவி, 122 ஊராட்சி தலைவர் பதவி, 75 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி, 9 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 1,250 பதவிகள் இருந்தன. இவற்றில் 4 ஊராட்சி தலைவர்கள், 247 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வானர்கள். இதனால் 999 பதவிக்கு 3 ஆயிரத்து 88 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மேற்கண்ட 7 ஊராட்சிகளில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 412 ஆண்கள், 2 லட்சத்து 33 ஆயிரத்து 955 பெண்கள், 33 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 4 லட்சத்து 62 ஆயிரத்து 400 வாக்காளர்கள் உள்ளனர். 784 வாக்குச்சாவடிகள் 66 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இதில் 182 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி 62 வாக்குச்சாவடிகளில் நுண்தேர்தல் பார்வையாளர்கள் நியமித்தும், 57 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தியும், 63 வாக்குச்சாவடிகளில் வீடியோ கிராபர்கள் மூலம் வீடியோ பதிவு செய்தும் கண்காணிக்கப்பட்டது.

நேற்று காலை 7 மணி முதல் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. ஒரு வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள் 1 முதல் 6 என மொத்தம் 7 பேர் பணியாற்றினார்கள். மொத்தம் 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடி ஊழியர்கள் பணியாற்றினார்கள். வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 1,700 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியாற்றினார்கள்.

2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவான வாக்குகள் விவரத்தை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. காலை முதல் விறு, விறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது. அதன்படி காலை 9 மணி வரை 8.58 சதவீதமும், 11 மணி வரை 23.87 சதவீதமும், மதியம் 1 மணி வரை 41.36 சதவீதமும், மாலை 3 மணி வரை 56.69 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது. இறுதியில் மாவட்டத்தில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 535 ஆண்கள், 1 லட்சத்து 70 ஆயிரத்து 915 பெண்கள், 6 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3 லட்சத்து 41 ஆயிரத்து 456 வாக்குகள் பதிவானது. இது 73.84 சதவீதமாகும்.

மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. கூட்டம் அதிகமாக இருந்து 5 மணிக்குள் வாக்குச்சாவடியில் வாக்களிக்காமல் இருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு அந்தந்த ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் அந்த அறைக்கு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 2-வது கட்ட தேர்தல் அவினாசி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 30-ந் தேதி நடக்கிறது.


Next Story