வாடிப்பட்டி அருகே மலைப்பகுதியில், பனி மூட்டம்; 10 மணிக்கு மேல் சூடுபிடித்த வாக்குப்பதிவு


வாடிப்பட்டி அருகே மலைப்பகுதியில், பனி மூட்டம்; 10 மணிக்கு மேல் சூடுபிடித்த வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 28 Dec 2019 4:15 AM IST (Updated: 28 Dec 2019 6:12 AM IST)
t-max-icont-min-icon

வாடிப்பட்டி அருகே மலைப்பகுதியில் கடும் பனி மூட்டத்தால் 10 மணிக்கு மேல் வாக்குப்பதிவு தொடங்கியது.

வாடிப்பட்டி, 

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2 மாவட்ட ஊராட்சி வார்டு, 14 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 23 ஊராட்சி மன்ற தலைவர், 180 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடந்தது. 110 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இங்கு ஆண் வாக்காளர்கள் 2,8619, பெண் வாக்காளர்கள் 2,9416 உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் 37 எனவும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் 10 எனவும் கண்டறியப்பட்டு இருந்தது.

மேலும் விராலிப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட சிறுமலை மீனாட்சிபுரத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் அலுவலர்கள் அங்கு தயாராக இருந்தார்கள். எனினும் இங்கு காலையில் கடும் பனிப்பொழிவு இருந்தது. பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் மழைவாழ்மக்கள் 10 மணிக்கு மேல் வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். இங்கு மொத்தமுள்ள 256 பேரில் 196 பேர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். மேலும் செம்மினிப்பட்டி, குட்லாடம்பட்டி, கச்சைகட்டி, ஆண்டிபட்டி பகுதிகளில் வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் சிரமமின்றி வாக்களித்தனர்.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முதியோருக்காக 56 சக்கர நாற்காலிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மேலக்கால், பாலகிருஷ்ணாபுரம், முள்ளிப்பள்ளம், தென்கரை உள்ளிட்ட சில வாக்குச்சாவடிகளில் சிலர் காத்திருந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இரவு வரை வாக்களித்தனர்.


Next Story