குழந்தையுடன் பேராசிரியை கிணற்றில் குதித்த சம்பவம்: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது


குழந்தையுடன் பேராசிரியை கிணற்றில் குதித்த சம்பவம்: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
x
தினத்தந்தி 28 Dec 2019 11:00 PM GMT (Updated: 28 Dec 2019 2:58 PM GMT)

குழந்தையுடன் பேராசிரியை கிணற்றில் குதித்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியையின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு எம்.ஆர்.நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவரது மனைவி அன்பரசி (31). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணன், அன்பரசி ஆகிய 2 பேரும் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். முதல் குழந்தை எல்.கே.ஜி. படித்து வருகிறாள். 2-வது பெண் குழந்தையான கோமதி என்கிற மேகாஸ்ரீ(1) அரியலூர் ராம்ஜி நகரில் உள்ள அன்பரசின் பெற்றோர் வீட்டில் வளர்ந்து வந்தாள்.

இந்நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் முதல் குழந்தையை அன்பரசி, தனது பெற்றோர் வீட்டில் கொண்டு விட்டு, விட்டு, 2-வது மகள் மேகாஸ்ரீயை தனது வீட்டிற்கு அழைத்து வந்தாள். கடந்த 25-ந் தேதி மாலை திடீரென்று சரவணன், அன்பரசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அன்பரசி தனது மகள் மேகா ஸ்ரீயை தூக்கிக்கொண்டு வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் குதித்தார். இதில் அன்பரசியை அக்கம், பக்கத்தினர் காப்பாற்றினர். ஆனால் மேகா ஸ்ரீ தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டாள்.

கணவர் கைது

இது தொடர்பாக பெரம்பலூர் (வடக்கு) கிராம நிர்வாக அதிகாரி ஞானபிரகாசம் கொடுத்த புகாரின் பேரில், இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தெரியவந்ததாக போலீசார் கூறுகையில், சரவணனுக்கு, அவர் கல்லூரியில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனை அன்பரசி கண்டித்து வந்தார். இதனால் அன்பரசிக்கும், சரவணனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் இது தொடர்பாக சரவணனுடன் சேர்ந்து, அவரது தாய் ருக்குமணியும் அன்பரசியை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் சம்பவத்தன்று அன்பரசி தனது குழந்தை மேகாஸ்ரீயுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அன்பரசியை தற்கொலைக்கு தூண்டியதாக, அவரது கணவர் சரவணன், மாமியார் ருக்குமணி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சரவணனை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததாக அன்பரசி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story