நண்டு ஏற்றுமதியில் இரு மடங்கு பணம் தருவதாக கூறி குடியாத்தம் என்ஜினீயரிடம் ரூ.70 லட்சம் மோசடி - 5 பேர் மீது புகார்


நண்டு ஏற்றுமதியில் இரு மடங்கு பணம் தருவதாக கூறி குடியாத்தம் என்ஜினீயரிடம் ரூ.70 லட்சம் மோசடி - 5 பேர் மீது புகார்
x
தினத்தந்தி 29 Dec 2019 4:00 AM IST (Updated: 28 Dec 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

நண்டு ஏற்றுமதியில் இரு மடங்கு பணம் தருவதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குடியாத்தம் என்ஜினீயர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

வேலூர்,

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் வெங்கடாசலபதி நகரை சேர்ந்தவர் பிரதீப், என்ஜினீயர். இவர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

என் தந்தை ஓய்வு பெற்ற ராணுவவீரர். எனக்கு திருவண்ணாமலையை சேர்ந்த சம்பத் மற்றும் ரேணுகா ஆகியோர் அறிமுகமாகினர். அவர்கள் சென்னையில் இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தின் பங்குதாரர்கள் என்றும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 2 மடங்கு பணம் கிடைக்கும் என்றும் கூறினர்.

பின்னர் அதே நிறுவனத்தை சேர்ந்த ஆதித்தியாகுமரன், சென்னையை சேர்ந்த வெங்கட், திருச்சியை சேர்ந்த முருகேசன் ஆகியோரும் ஆசை வார்த்தை கூறினர். சென்னையில் நடந்த கூட்டத்தில் அவர்கள் என்னிடம், முதலீடு செய்யும் தொகைக்கு 9 மாதத்தில் இரு மடங்கு பணம் கிடைக்கும் என்றனர். அதைத்தொடர்ந்து வேலூரில் கூட்டம் நடத்தினர்.

அதில் எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு தூண்டினர். நண்டுகள் ஏற்றுமதி செய்வதாகவும், அதில் முதலீடு செய்யும் தொகையில் இருந்து இரு மடங்கு பணம் தருவதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து நான் பல தவணைகளாக ரூ.70 லட்சம் வரை பணம் கொடுத்தேன். இதையடுத்து அவர்களிடம் எனது பணத்தை கேட்டேன் ஆனால் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. பணமும் கொடுக்கவில்லை. அவர்கள் திட்டமிட்டு என்னை மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

இந்த மனு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

பிரதீப் போன்று, குடியாத்தத்தை சேர்ந்த முடி வியாபாரம் செய்யும் தண்டபாணி என்பவரிடம் ரூ.6½ கோடி ஏமாற்றி உள்ளனர். அவர் அளித்த புகாரின் பேரில் சம்பத் உள்பட 6 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் இரு மடங்கு பணம் தருவதாக கூறி தண்டபாணி, பிரதீப் ஆகியோரிடம் ஏமாற்றி உள்ளனர். இந்த மோசடி கும்பலிடம் இன்னும் பலர் ஏமாந்்திருக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் புகார் கொடுக்கலாம் என்றனர்.

Next Story