தண்டராம்பட்டு அருகே பயங்கரம்: தந்தையை வெட்டி கொன்ற மகன் கைது - மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்


தண்டராம்பட்டு அருகே பயங்கரம்: தந்தையை வெட்டி கொன்ற மகன் கைது - மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்
x
தினத்தந்தி 29 Dec 2019 4:15 AM IST (Updated: 28 Dec 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

தண்டராம்பட்டு அருகே தந்தையை வெட்டி கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

வாணாபுரம், 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே அரடாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 67). இவருக்கு முருகன், லட்சுமணன், சேகர் ஆகிய 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

பெருமாளின் 3-வது மகன் சேகரின் மனைவி சத்யா (30). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சேகரை பிரிந்து சத்யா தனியாக வசித்து வந்தார். தற்போது சத்யா வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

மனைவி தன்னுடன் வாழ்க்கை நடத்தாததற்கு தந்தை பெருமாள் தான் காரணம் என சேகர் அடிக்கடி கூறி அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பெருமாளுக்கும், சேகருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் பெருமாள் தூங்க சென்றார்.

நள்ளிரவு தூங்கி கொண்டிருந்த பெருமாளை சேகர் அரிவாளால் தலை, கழுத்தில் பயங்கரமாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கு சேகர் அரிவாளுடன் நின்றிருந்தார்.

இதுகுறித்து வெறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெருமாளின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story