வாக்கு எண்ணும் மையங்களில் 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
வாக்கு எண்ணும் மையங்களில் 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் அனக்காவூர், செய்யாறு, கீழ்பென்னாத்தூர், பெரணமல்லூர், தண்டராம்பட்டு, தெள்ளார், துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை, வெம்பாக்கம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 1,930 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது.
இந்த 9 ஒன்றியங்களில் 8 லட்சத்து 65 ஆயிரத்து 267 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 624 வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். இது 82.82 சதவீதமாகும். ஊராட்சி ஒன்றியம் வாரியாக வாக்குப்பதிவு சதவீதத்தில் வருமாறு:- அனக்காவூர்- 84.01, செய்யாறு- 83, கீழ்பென்னாத்தூர்- 81.44, பெரணமல்லூர்- 84.04, தண்டராம்பட்டு- 81, தெள்ளார்- 81.25, துரிஞ்சாபுரம்- 84.49, திருவண்ணாமலை- 81, வெம்பாக்கம்- 87.14.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பெட்டி உள்ளிட்ட வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள் சாக்கு பைகளில் வைத்து கட்டப்பட்டு வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது. பின்னர் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டது.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குப்பெட்டிகள் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளிக்கும், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கு பெட்டிகள் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளிக்கும் உள்பட 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பெட்டிகள் சரிபார்க்கப்பட்டு மையத்தில் உள்ள இருப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
பின்னர் அந்த வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள இருப்பறைக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் அலுவலர்கள் ‘சீல்’ வைத்தனர். வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு உள்பட 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் இந்த வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறைகள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அது மட்டுமின்றி வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் பிரிக்கும் இடத்திலும், வாக்குகள் எண்ணும் இடத்திலும் கம்புகள் கட்டப்பட்டு தனித்தனி அறைகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் நாளன்று நடைபெறும் சம்பவங்களை தொடர்ந்து கண்காணிக்க வாக்கு பிரிக்கும் இடத்திலும், வாக்கு எண்ணும் இடத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற 2-ந் தேதி (வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது.
Related Tags :
Next Story