மன்னார்குடி அருகே மர்ம காய்ச்சலுக்கு அண்ணன்-தம்பி பலி கிராமமே சோகத்தில் மூழ்கியது


மன்னார்குடி அருகே மர்ம காய்ச்சலுக்கு அண்ணன்-தம்பி பலி கிராமமே சோகத்தில் மூழ்கியது
x
தினத்தந்தி 29 Dec 2019 4:45 AM IST (Updated: 29 Dec 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே மர்ம காய்ச்சலுக்கு அண்ணன்-தம்பி பரிதாபமாக இறந்தனர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளது தலையாமங்கலம். இங்குள்ள பாரதியார் தெருவில் வசித்து வரும் சிவக்குமார்-நிசாந்தினி தம்பதியருக்கு 4 வயதில் ஜஸ்வின் மற்றும் 2 வயதில் அர்‌‌ஷத் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜஸ்வினுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த சிறுவனை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவன் சிகிச்சை பெற்று வந்தான். சிறுவன் ஜஸ்வின் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுவன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான்.

அடுத்தடுத்து சாவு

இந்த நிலையில் அர்‌ஷித்தும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். ஜஸ்வினுக்கு திருச்சி தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால் அங்கிருந்து தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து அங்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவன் ஜஸ்வின் சிகிச்சை பலனின்றி கடந்த 26-ந் தேதி உயிரிழந்தான்.

இதற்கிடையே சிறுவன் அர்‌ஷித்தும் மேல் சிகிச்சைக்கு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மர்ம காய்ச்சல் குணமடையாததால் அந்த சிறுவனையும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை சிறுவன் அர்‌ஷித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

மர்ம காய்ச்சலுக்கு அடுத்தடுத்து தங்களது இரண்டு மகன்களையும் பறிகொடுத்த சிவக்குமார்-நிசாந்தினி தம்பதியினர் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்ந்து உள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் அவர்களது உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது

இதற்கு முன்பு இதே கிராமத்தில் உள்ள பாரதியார் தெருவில் வசித்த 5 வயது சிறுவன் தீபக்குமார் மற்றும் 3 வயது சிறுவன் நதின் இருவரும் இதேபோன்று மர்ம காய்ச்சல் பாதித்து உயிரிழந்ததாகவும் கிராமத்தினர் தெரிவித்தனர். மர்ம காய்ச்சலுக்கு(வைரஸ்) கடந்த சில மாதங்களில் 4 சிறுவர்கள் உயிரிழந்திருப்பது தலையாமங்கலம் கிராம மக்களிடையே அச்சத்தையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தங்களது கிராமத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story