சீர்காழி அருகே பரபரப்பு முகவர் இல்லாமல் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைக்கு சீல் வைத்ததால் தி.மு.க.வினர் தர்ணா


சீர்காழி அருகே பரபரப்பு முகவர் இல்லாமல் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைக்கு சீல் வைத்ததால் தி.மு.க.வினர் தர்ணா
x
தினத்தந்தி 29 Dec 2019 4:30 AM IST (Updated: 29 Dec 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே முகவர் இல்லாமல் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைக்கு சீல் வைத்ததால் கல்லூரி வளாகத்தில் தி.மு.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரியில் இருந்து அடையாள அட்டையின்றி வெளியே வந்த 2 பேரை தி.மு.க.வினர் சரமாரியாக தாக்கி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சீர்காழி,

நாகை மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 37 பஞ்சாயத்து தலைவர்கள், 21 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 309 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் 192 வாக்குச்சாவடிகளில் நடந்தது.

பின்னர் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான சீர்காழி கீழத்தென்பாதியில் உள்ள விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வரப்பட்டது.

முகவர் இல்லாமல்...

பின்னர் அங்குள்ள பாதுகாப்பு அறையில் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அப்போது அதிகாரிகள் தி.மு.க. முகவர் உள்பட எந்த அரசியல் கட்சியினரும் இல்லாமல் பாதுகாப்பு அறைக்கு சீல் வைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் ஆயுதம் தாங்கிய போலீசார் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தாக்குதல்

இந்த நிலையில் வாக்குப்பதிவு மையத்தில் இருந்து சீல் வைக்கப்பட்டு முகவரி அட்டையுடன் கொண்டு வரப்பட்ட சீட்டுகள் கல்லூரி வாசல் அருகே வெளியே சிதறிக்கிடந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தி.மு.க.வினர் கல்லூரி முன்பு திரண்டனர்.

அப்போது கல்லூரியில் இருந்து உரிய அடையாள அட்டை இன்றி 2 பேர் வெளியே வந்தனர். அவர்களை கண்டு ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் அவர்களை சரமாரியாக தாக்கினர். அப்போது அவர்கள் தி.மு.க.வினரின் பிடியில் இருந்து தப்பி ஓடினர்.

ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு

பின்னர் தி.மு.க.வினர், வாக்குப்பெட்டிகள் மாற்றப்பட்டதாக கூறி கல்லூரியின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடிகளை கல்வீசி அடித்து உடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பாதுகாப்பு பணியில் குறைந்த அளவிலான போலீசார் இருந்ததால் அவர்களால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கல்லூரி வளாகம் போர்க்களம்போல காட்சி அளித்தது.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு வந்தனா, மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க.வினரும் கல்லூரிக்கு திரண்டு வந்தனர்.

இதனைத்தொடர்ந்து தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், கட்சி தேர்தல் பார்வையாளர் தாம்பரம் ராஜா எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் சசிக்குமார், பிரபாகர், நகர செயலாளர் சுப்பராயன் உள்ளிட்ட தி.மு.க.வினருடன்,. போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

அப்போது தி.மு.க.வினர், தேர்தல் அலுவலர்களான ரெஜினாராணி, கஜேந்திரன், மேலாளர் கலியராஜ் ஆகியோர் தி.மு.க உள்ளிட்ட எந்த கட்சி பிரமுகரையும் அழைக்காமல் தன்னிச்சையாக வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைக்கு சீல் வைத்தது ஏன்? கல்லூரி வாசலில் முகவரி சீட்டு சிதறிக்கிடந்ததின் மர்மம் என்ன? என்று சரமாரியாக போலீசாரிடம் கேள்வி எழுப்பினர்.

பின்னர் அவர்கள், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை உடனடியாக ஆய்வுசெய்ய வேண்டும். மேற்கண்ட தேர்தல் அலுவலர்களை வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினருடன் மயிலாடுதுறை உதவி கலெக்டர் மகாராணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது தி.மு.க.வினர், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளான ரெஜினாராணி, கஜேந்திரன், மேலாளர் கலியராஜ், ஆகியோரை பணிநீக்கம் செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போது உள்ளுர் தேர்தல் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த கூடாது என வலியுறுத்தினர்.

அதை கேட்ட உதவி கலெக்டர் மகாராணி, உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்று தி.மு.க.வினர் கல்லூரியில் இருந்து கலைந்து சென்றனர். மதியம் 2 மணிக்கு தொடங்கிய தி.மு.க.வினர் போராட்டம் இரவு 8.45 மணி வரை சுமார் 6¾ மணி நேரம் நீடித்தது.


Next Story