திருச்சி மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தல்: 8 ஊராட்சி ஒன்றியங்களில் நாளை ஓட்டுப்பதிவு


திருச்சி மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தல்: 8 ஊராட்சி ஒன்றியங்களில் நாளை ஓட்டுப்பதிவு
x
தினத்தந்தி 29 Dec 2019 4:30 AM IST (Updated: 29 Dec 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 8 ஊராட்சி ஒன்றியங்களில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் நேற்று முன் தினம் அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய 6 ஒன்றியங்களில் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் 2-ம் கட்ட தேர்தல் நாளை(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடக்கிறது. திருச்சி மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தல் லால்குடி, மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஆகிய 8 ஒன்றியங்களில் நடக்கிறது.

7 லட்சம் வாக்காளர்கள்

8 ஊராட்சி ஒன்றியங்களிலும் 7 லட்சத்து 2 ஆயிரத்து 253 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 1,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்சாரம் தடையின்றி கிடைக்கவும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் உள்ளதா? என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் எஸ்.சிவராசு உத்தரவிட்டுள்ளார்.

வாக்காளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

105 பதற்றமான வாக்குச்சாவடிகள்

மேலும் 1,337 மொத்த வாக்குச்சாவடிகளில், 105 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர்-11, லால்குடி-18, புள்ளம்பாடி-16, முசிறி-16, தா.பேட்டை-7, துறையூர்-11, தொட்டியம்-11, உப்பிலியபுரம்-15 என 105 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.

அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

களத்தில் வேட்பாளர்கள்

2-ம் கட்ட தேர்தலில் ஒன்றியங்கள் வாரியாக களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

1.லால்குடி-மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் 9, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் 109, கிராம பஞ்சாயத்து தலைவர்கள் 218, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 888. மொத்தம் 1,224 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

2.மண்ணச்சநல்லூர்- மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் 12, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் 101, கிராம பஞ்சாயத்து தலைவர்கள் 162, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 961. மொத்தம் 1,236 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

3.புள்ளம்பாடி- மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் 10, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் 59, கிராம பஞ்சாயத்து தலைவர்கள் 120, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 553. மொத்தம் 742 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

4.முசிறி-மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் 8, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் 75, கிராம பஞ்சாயத்து தலைவர்கள் 144, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 620. மொத்தம் 847 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

5.தொட்டியம்-மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் 9, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் 72, கிராம பஞ்சாயத்து தலைவர்கள் 116, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 634. மொத்தம் 831 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

6.தா.பேட்டை-மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் 4, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் 58, கிராம பஞ்சாயத்து தலைவர்கள் 116, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 508. மொத்தம் 686 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

7.துறையூர்-மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் 8, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் 79, கிராம பஞ்சாயத்து தலைவர்கள் 147, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 600. மொத்தம் 834 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

8.உப்பிலியபுரம்-மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் 3, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் 70, கிராம பஞ்சாயத்து தலைவர்கள் 85, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 453. மொத்தம் 611 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

Next Story