திருவாரூர் மாவட்டத்தில், இன்று 5 ஒன்றியங்களுக்கு 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல்


திருவாரூர் மாவட்டத்தில், இன்று 5 ஒன்றியங்களுக்கு 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல்
x
தினத்தந்தி 29 Dec 2019 11:00 PM GMT (Updated: 29 Dec 2019 4:36 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் 5 ஒன்றியங்களுக்கு 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று(திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதில் 72 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முதல் கட்டமாக திருவாரூர், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய 5 ஒன்றியங்களில் கடந்த 27-ந்தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 2-வது கட்ட வாக்குப்பதிவு நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம் ஆகிய 5 ஒன்றியங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் 3,458 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலில் 1,642 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து 2-வது கட்ட தேர்தலில் 1,816 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிது. இந்த பதவிகளுக்கு

5,578 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக 5 ஒன்றியங்களில் 933 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 72 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1,731 போலீசார்

இதில் நீடாமங்கலம்-1,212, நன்னிலம் -1,192, குடவாசல் -1,223, கொரடாச்சேரி -1,167, வலங்கைமான் -1,162 என மொத்தம் 5,956 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. தேர்தல் பணியில் 1,731 போலீசார் ஈடுபடுகின்றனர். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

நீடாமங்கலம்

இதேபோல் நீடாமங்கலம் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகள் உள்ளன. இங்கு 339 ஊராட்சி வார்டுகள் உள்ளன. இவற்றில் ஒரு ஊராட்சி தலைவர், 50 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ள கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 21 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியிடங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. நீடாமங்கலம் ஒன்றியத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 793 ஆகும். இவர்கள் வாக்களிப்பதற்காக 192 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு நேற்று கிராமப்புறங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கொரடாச்சேரி

கொரடாச்சேரி ஒன்றியத்தில் 2-வது கட்டமாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தலையொட்டி 184 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 83 ஆயிரத்து 753 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொறுப்புக்கு 9 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு 69 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்புக்கு 180 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பொறுப்புக்கு 1,004 பேரும் போட்டியிடுகின்றனர். கொரடாச்சேரி ஒன்றியத்தில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு கொரடாச்சேரி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டன.

வலங்கைமான்

வலங்கைமான் ஒன்றியத்தில் இன்று நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலில் 67 ஆயிரத்து 269 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதையடுத்து வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான அனைத்து பொருட்களையும் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து போலீசார் வாகனத்தில் ஏற்றி அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பிவைத்தனர். இந்த பணிகளை மாவட்ட வட்டார தேர்தல் பார்வையாளர் கண்ணன், ஒன்றிய ஆணையர்கள் சிவக்குமார், தமிழ்ச்செல்வி ஆகியோர் தலைமையில் ஒன்றிய பொறியாளர்கள் மோகன், தணிகாசலம் மற்றும் ஒன்றிய அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டனர்.


Next Story