ரிஷிவந்தியம் அருகே பரபரப்பு: கடனுக்கு மதுபானம் தர மறுத்த விற்பனையாளர் மீது பீர்பாட்டிலால் தாக்குதல் - வாலிபர் கைது
ரிஷிவந்தியம் அருகே கடனுக்கு மதுபானம் தர மறுத்த டாஸ்மாக் விற்பனையாளரை பீர்பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ரிஷிவந்தியம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இக்கடையின் விற்பனையாளராக கோமாலூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வராஜ்(வயது 44) என்பவர் இருந்து வருகிறார்.
நேற்று மதியம் 12 மணியளவில் செல்வராஜ் கடையை திறந்து மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது லாலாபேட்டையை சேர்ந்த ஏழுமலை மகன் தொழிலாளியான சத்யராஜ்(25) என்பவர் கடைக்கு வந்து, செல்வராஜிடம் கடனுக்கு மதுபானம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு செல்வராஜ் மறுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சத்யராஜ், கடைக்குள் சென்று அவரை ஆபாசமாக திட்டினார். பின்னர் அருகில் இருந்த பீர்பாட்டிலால் செல்வராஜின் தலையிலும், கழுத்திலும் சரமாரியாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டைகூட்டு ரோடு போலீசார் வழக்குப்பதிந்து சத்யராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story