தியாகதுருகம் அருகே லாரி மீது வேன் மோதல்; டிரைவர் சாவு - 19 பேர் காயம்
தியாகதுருகம் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 19 பேர் காயமடைந்தனர்.
கண்டாச்சிமங்கலம்,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த 18 பேர் மேல்மருவத்தூர் கோவிலுக்கு ஒரு வேனில் சென்றனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு அதே வேனில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். வேனை கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள எருமக்காரன்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் மகன் கார்த்தி(வயது 25) என்பவர் ஓட்டினார். இவர்கள் வந்த வேன் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் புறவழிச்சாலையில் பிரிதிவிமங்கலம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னாள் தியாகதுருகத்தில் இருந்து மக்காச்சோளத்தை ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் புவனாச்சி நோக்கி சென்ற லாரி மீது, கார்த்தி ஓட்டிச்சென்ற வேன் மோதியது. அப்போது இந்த வேனுக்கு பின்னால் வந்த காரும், வேன் மீது மோதியது.
இதில் வேன் டிரைவர் கார்த்தி, வேனில் பயணம் செய்த வினோத்குமார்(27), மல்லிகா(50), மீனா(28), இவருடைய மகன் யுவனேஷ்(4), சின்ராஜ்(31), பிரியா(26), இவருடைய மகன்கள் பிரனேஷ்(6), தவனேஷ்(3), சர்வேஷ்(2) நதியா(36), முருகேசன்(40), காரில் வந்த சதீஷ்(35) உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story