ஊட்டி, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன


ஊட்டி, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன
x
தினத்தந்தி 29 Dec 2019 10:30 PM GMT (Updated: 29 Dec 2019 4:38 PM GMT)

ஊட்டி, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக குன்னூர் மற்றும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 27-ந் தேதி நடந்து முடிந்தது. ஊட்டி, கூடலூர் ஆகிய 2 ஒன்றியங்களில் இன்று(திங்கட்கிழமை) 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 4 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 37 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 18 கிராம ஊராட்சி தலைவர், 216 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 275 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். நேற்று முன்தினத்துடன் பிரசாரம் நிறைவடைந்தது.

ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 146 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தொட்டபெட்டா, எப்பநாடு, உல்லத்தி, கடநாடு, கக்குச்சி, கூக்கல், மேல்குந்தா, நஞ்சநாடு, தும்மனட்டி, தூனேரி, பாலகொலா, முள்ளிகூர், இத்தலார் ஆகிய 13 கிராம ஊராட்சிகள் உள்ளது. ஊட்டி ஒன்றியத்தில் ஆண் வாக்காளர்கள் 42 ஆயிரத்து 531 பேர், பெண் வாக்காளர்கள் 45 ஆயிரத்து 737 பேர், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 88 ஆயிரத்து 270 பேர் இருக்கின்றனர். 20 மண்டல பகுதிகளுக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஊட்டி ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சிறிய மற்றும் பெரிய அளவிலான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள், வாக்காளர் பட்டியல் மற்றும் அழியாத மை, வாக்களிப்பு மறைவு அட்டை உள்பட 72 வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் மண்டலம் வாரியாக பிரித்து வைக்கப்பட்டு இருந்தது. தேர்தலையொட்டி அந்த பொருட்களை சரிபார்த்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டார். அப்போது ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரே‌‌ஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமே‌‌ஷ், சந்திரசேகர் உடனிருந்தனர்.

அதனை தொடர்ந்து மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு பொருட்களை பெற்றுக்கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றினர். மாற்றுத்திறனாளிகள் உதவியாளருடன் சென்று வாக்களிக்கும் வகையில் சக்கரத்துடன் கூடிய 25 நாற்காலிகள் ஏற்றப்பட்டன. பின்னர் மண்டல அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பொருட்களை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சென்றனர். ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3-ம் கட்ட பயிற்சி நேற்று நடந்தது. பயிற்சிக்கு பிறகு அவர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு சென்றார்கள். அதேபோல் கூடலூர் ஒன்றியத்திலும் வாக்குப்பதிவுக்கான பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story