ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் தரக்குறைவாக பேசுவதா? நாராயணசாமிக்கு, கிரண்பெடி பரபரப்பு கடிதம்


ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் தரக்குறைவாக பேசுவதா? நாராயணசாமிக்கு, கிரண்பெடி பரபரப்பு கடிதம்
x
தினத்தந்தி 29 Dec 2019 11:15 PM GMT (Updated: 2019-12-29T22:13:14+05:30)

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் தரக்குறைவாக பேசவேண்டாம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி கடிதம் அனுப்பியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண் பெடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக மோதல் நடந்து வருகிறது. இவர்களுக்கு இடையே நடந்து வரும் இந்த பனிப்போர் அவ்வப்போது வெளிப்படையாக வெடிக்கும். அப்போது அவர்கள் தடித்த சொற்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. சில நாட்கள் உச்சத்தில் இருக்கும் இந்த மோதல் பின்னர் சில நாட்களில் தானாகவே அமைதியாகிவிடும்.

பிடிவாதம்

குறிப்பாக பண்டிகை காலங்களில் இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டும். ஏனெனில் பண்டிகைகளுக்கு இலவச பொருட்கள் வழங்குவதில் இருவரிடையேயும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

பொருட்களுக்கு பதிலாக பணம்தான் வழங்குவேன் என்று கவர்னரும், பொருட்களாக வழங்கவேண்டும் என்று முதல்-அமைச்சரும் பிடிவாதம் பிடிப்பார்கள். அந்த பண்டிகை முடிந்த பின் இருவரும் அமைதியாக இருப்பர்.

மீண்டும் மோதல்

இதற்கிடையே பொங்கல் பண்டிகைக்கு இலவச பொருட்கள், ரொக்கம் வழங்குவது தொடர்பாகவும் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் எழுந்துள்ளது.

கவர்னர் கிரண்பெடி குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கடுமையாக விமர்சிப்பதும், அதற்கு கவர்னர் கிரண்பெடி பதிலடி கொடுப்பதுமாக இருந்து வருகிறது. இந்த முறை புதுவை அரசு அதிகாரி ஒருவரின் சாவுக்கு கவர்னர் கிரண் பெடியின் மிரட்டல்தான் காரணம் என்ற ஒரு குண்டை அதிரடியாக முதல்-அமைச்சர் நாராயணசாமி வீசி உள்ளார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டு

இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி முதல்-அமைச்சர் நாராயண சாமிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதை சமூக வலைதளத்திலும் வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் கவர்னர் கிரண்பெடி கூறியிருப்ப தாவது:-

கவர்னரான என்னையும், அரசியலமைப்பு அலுவலகமாக உள்ள கவர்னர் மாளிகை மீதும் கடந்த சில நாட்களாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி தரக்குறைவாக பேசிவருகிறீர்கள். புத்தர் கூறியதை முதலில் நினைவு கொள்ளுங்கள்.

கண்ணியத்தை காப்பாற்றுங்கள்

குற்றச்சாட்டுகளை கூறும்போது, அதை ஒருவர் ஏற்கவில்லை எனில் அது குற்றம் சாட்டுபவரைத்தான் சாரும். முதல்-அமைச்சர் அலுவலகம் என்ற கண்ணியத்தை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

கவர்னர் மாளிகையை தாங்கள் மோசமாக பேசுவதை மக்கள் ஏற்கவில்லை. அத்தகைய மோசமான நடத்தையிலிருந்து நீங்கள் விலகுவீர்கள் என்று நம்புகிறேன்.

கருத்து வேறுபாடுகளை...

கவர்னர் அலுவலகம் முற்றிலும் புதுச்சேரிக்கும், அதன் மக்களுக்கும் என்ன தேவை? என்பதை உணர்ந்து செயல்படுகிறது. கருத்து வேறுபாடுகளை கூற கண்ணியமான இடம் உள்ளது என்பதை தயவு செய்து அறிந்துகொள்ளுங்கள். அந்த வழியில் செல்லுங்கள். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தர விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.


Next Story