கடலூர் மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது - 6 லட்சம் பேர் வாக்களிக்கிறார்கள்


கடலூர் மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது - 6 லட்சம் பேர் வாக்களிக்கிறார்கள்
x
தினத்தந்தி 29 Dec 2019 11:00 PM GMT (Updated: 29 Dec 2019 6:53 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் உள்பட 7 ஊராட்சி ஒன்றியங்களில் 2-வது கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் 6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

கடலூர், 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 27-ந் தேதி நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் கடலூர், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, மங்களூர், மேல்புவனகிரி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூர், ஸ்ரீமு‌‌ஷ்ணம் மற்றும் விருத்தாசலம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மாவட்ட, ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு 2-வது கட்ட வாக்குப்பதிவு இன்று(திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

2-வது கட்ட தேர்தலில் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 397 ஊராட்சி வார்டு உறுப்பினர், 287 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 342 ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்காக மொத்தம் 1,292 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 6 லட்சத்து 1,163 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பொதுமக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, சக்கர நாற்காலி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

முன்னதாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 3-வது கட்ட பயிற்சி வகுப்பு நேற்று காலையில் அந்தந்த ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டு வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்கள். பயிற்சி வகுப்பு முடிந்ததும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. அதில் தாங்கள் பணிக்கு செல்ல வேண்டிய இடத்தை அறிந்த பின்னர் தங்களுக்குரிய வாக்குச்சாவடிக்கு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வாக்குப்பெட்டி உள்ளிட்ட தளவாட பொருட்களை வாக்குச்சாவடிக்கு எடுத்து செல்வதற்காக அமைக்கப்பட்ட 91 மண்டல குழுவினரும் வேனில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு நேற்று காலையில் வந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் மண்டல அலுவலர்களிடம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள், அழியாதை மை, வாக்குச்சீட்டுகள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட 72 வகையான பொருட்கள் அடங்கிய சாக்கு மூட்டைகள் ஒப்படைக்கப்பட்டன.

பின்னர் அவற்றை பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து சென்று வாக்குப்பதிவு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஏதுவாக வாக்குச்சாவடியை அதிகாரிகள் தயார் செய்தனர். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.

இந்த தேர்தலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி கூறும்போது, ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் 2-வது கட்ட தேர்தலிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வன்முறை செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story