உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர்-கலெக்டர் ஆய்வு


உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர்-கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Dec 2019 4:30 AM IST (Updated: 30 Dec 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பார்வையாளர் அனீஸ்சேகர், கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை தேர்தல் பார்வையாளர் அனீஸ்சேகர், கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் தனித்தனியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையமான மதுக்கூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையமான பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையமான அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றை மாவட்ட தேர்தல் பார்வையாளர் அனீஸ்சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தேவைப்படும் இடங்களில் செய்யப்பட்டுள்ள தடுப்புகள், பாதுகாப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை பார்வை யிட்டார்.

முன்னதாக அவர் அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் முதல்கட்ட தேர்தலின்போது பதிவான வாக்குகள் பூண்டி பு‌‌ஷ்பம் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள இடத்தையும், அங்கு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவையும் பார்வையிட்டார்.

கலெக்டர் ஆய்வு

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வாக்கு எண்ணும் மையமான மதுக்கூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையமான பெரியநாயகிபுரம் கலாம் பாலிடெக்னிக் கல்லூரியை பார்வையிட்டார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள், பாதுகாப்பு அறை, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வாக்கு எண்ணும் அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கண்காணிப்பு கேமரா

வாக்கு எண்ணும் மையங்களில் தேவைப்படும் இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், தண்ணீர் வசதி, கழிவறை வசதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்யவும் அலுவலர்களை அறிவுறுத்தினார். தொடர்ந்து, மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தபால் வாக்கு படிவங்கள் வைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் கோவிந்தராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை அவர் பார்வையிட்டார்.

ஒரத்தநாடு- திருவோணம்

ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையமான ஒரத்தநாடு அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையமான ஊரணிபுரம் வெட்டுவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றையும் கலெக்டர் பார்வையிட்டார்..

ஆய்வின்போது பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கிளாஸ்டன் பு‌‌ஷ்பராஜ், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருக்காட்டுப்பள்ளி

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் முதல் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணிக்கை மையமான திருக்காட்டுப்பள்ளி சர்சிவசாமி அய்யர் மேல் நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை வருகிற 2-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வாக்குப்பதிவு அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் வருவதற்காக தனித்தனி வழிகள் அமைக்கப்பட்டு, அங்கு சவுக்கு கட்டைகள் மூலமாக தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளில் சவுக்கு கட்டைகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு கம்பி வலை போடப்பட்டுள்ளது.

309 பேர் நியமனம்

வாக்கு சீட்டுகளை நிறங்கள் வாரியாக பிரிப்பதற்கு 26 மேஜைகள் வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு 2 அறைகளில் 10 மேஜைகளிலும், ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு 3 அறைகளில் 15 மேஜைகளிலும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு 3 அறைகளில் மொத்தம் 15 மேஜைகளிலும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 5 அறைகளில் 25 மேஜைகளிலும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களின் முகவர்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்று கொண்டு வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்காக 309 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பெட்டிகளை எடுத்து வர தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை தேர்தல் அலுவலர்கள் கோபாலகிரு‌‌ஷ்ணன், கணேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story