திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம்
திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடந்தது. இதற்காக பிரமாண்ட தேசியக்கொடியை ஏந்தி ஊர்வமாக வந்தனர்.
திருப்பூர்,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக இந்து முன்னணி சார்பில் திருப்பூர் யுனிவர்செல் தியேட்டர் அருகே பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பு திருப்பூர் குமரன் சிலை முன்பு இருந்து ஊர்வலம் தொடங்கியது.
200 அடி நீள தேசியக்கொடியை ஏந்தியபடி வடமாநில இளைஞர்கள் ஊர்வலமாக வந்தனர். இதில் சிலர் பரமசிவன், கருப்பராயன் வேடமணிந்து வந்தார்கள். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வங்காள தேச முஸ்லிம்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பெண்கள் கைகளில் ஏந்தியபடி வந்தனர். சிறுவர்கள் சிலம்பாட்டம் ஆடியபடி சென்றனர். ஊர்வலமாக வந்தவர்கள் தேசியக்கொடி மற்றும் இந்து முன்னணி கொடிகளை கைகளில் ஏந்தியபடி சென்றனர். வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் ஊர்வலத்தில் பங்கேற்று, மோடிஜி, அமித்ஷாஜி என்று கோஷமிட்டபடி சென்றார்கள்.
திருப்பூர் குமரன் ரோடு வழியாக யுனிவர்செல் தியேட்டர் அருகே அமைக்கப்பட்டு இருந்த பொதுக்கூட்ட மேடைக்கு அருகே ஊர்வலம் நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்துக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசும்போது, “குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்யான தகவல்களை தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் பொதுமக்களிடம் பரப்பி வருகிறார்கள். இந்தியாவில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றால் மதமாற்ற தடை சட்டம், பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும். இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரத்தை ஏற்று இருப்பவர்கள் இங்கு இருக்கலாம். இதுபோல் கோவை, திருச்சி, சென்னையில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படும்” என்றார்.
கூட்டத்தில் மாநில அமைப்பாளர் பக்தன் பேசும்போது, “தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க,, கம்யூனிஸ்டுகளை நம்பி முஸ்லிம்கள் செல்ல வேண்டாம். பின்னர் தனித்து விடப்படுவீர்கள். தேசத்தை நேசிப்பவர்கள் இங்கு இருப்பதற்கு எந்த தடையும் கிடையாது. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான புரிதலை மக்களிடம் பரப்பி வருகிறார்கள். அகண்ட பாரதம் வேண்டும் என்பதே இந்து முன்னணியின் நோக்கம்” என்றார்.
இந்த கூட்டத்தில் தென்னாட்டு மக்கள் கட்சி நிறுவனர் கணேஷ், ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, இந்து முன்னணி மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி திருப்பூரில் முகாமிட்டு பாதுகாப்பு பணியை கவனித்தார்.
Related Tags :
Next Story