1,674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்: குமரியில் 4 ஒன்றியங்களில் இன்று 2-ம் கட்ட தேர்தல்


1,674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்: குமரியில் 4 ஒன்றியங்களில் இன்று 2-ம் கட்ட தேர்தல்
x
தினத்தந்தி 30 Dec 2019 4:30 AM IST (Updated: 30 Dec 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. 1,674 பேர் களத்தில் உள்ளனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதற்கட்ட தேர்தல் கடந்த 27-ந் தேதி நடைபெற்று முடிந்தது. அதாவது மொத்தம் 5 ஒன்றியங்களுக்கு தேர்தல் முடிந்துள்ளது. அந்த தேர்தலில் மொத்தம் 65.93 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இந்த நிலையில் மீதமுள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, முன்சிறை மற்றும் கிள்ளியூர் ஆகிய 4 ஒன்றியங்களுக்கான 2-ம் கட்ட தோ்தல் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிது. இதில் 5 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 50 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 47 பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கும், 465 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 1674 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

வாக்காளர்கள்

அதாவது அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 329 பேரும், தோவாளை ஒன்றியத்தில் 470 பேரும், முன்சிறை ஒன்றியத்தில் 577 பேரும், கிள்ளியூர் ஒன்றியத்தில் 298 பேரும் போட்டியிடுகிறார்கள். இந்த 2-ம் கட்ட தேர்தலுக்காக மொத்தம் 388 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 200 ஆண்களும், 1 லட்சத்து 13 ஆயிரத்து 21 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 77 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 298 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

ஒவ்வொரு வாக்காளர்களும் 4 வாக்குகளை அளிக்க வேண்டும். தேர்தல் நடைபெறும் ஒன்றியங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 5 வாக்குச்சாவடிகளும், தோவாளை ஒன்றியத்தில் 28 வாக்குச்சாவடிகளும், கிள்ளியூர் ஒன்றியத்தில் 10 வாக்குச்சாவடிகளும், முன்சிறை ஒன்றியத்தில் 27 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 70 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு இருக்கின்றன. அங்கு வாக்குப்பதிவு வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 4 ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குச்சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் மற்றும் ஸ்டாம்பு, மை உள்ளிட்ட பொருட்கள் கவனமாக கொண்டு செல்லப்பட்டன. தோவாளை ஒன்றியத்தில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பூதப்பாண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. இந்த பணிகள் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி முன்னிலையில் நடந்தன.

அஞ்சல் வாக்குச்சீட்டு பெட்டி

வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அதிகாரிகள் நேற்று மாலையே அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அனைத்து பணியாளர்களும் தங்களது ஓட்டை அஞ்சல் வாக்குச்சீட்டு பெட்டியில் ேபாட்டுவிட்டு சென்றனர். இதற்காக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் அஞ்சல் வாக்குச்சீட்டு பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அனைவரும் வாக்குகளை பதிவு செய்த பிறகு ஓட்டு பெட்டிக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.

பின்னர் வாக்கு எண்ணும் மையத்துக்கு பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டது. வாக்குச்சாவடிக்குள் எந்த ஒரு வாக்குச்சாவடி பணியாளரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. முன்னதாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கடைசி கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

அசம்பாவித சம்பவங்கள்

ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பின்னர் வாக்குப்பெட்டிகள் வேட்பாளர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு எடுத்து செல்லப்படும்.

உள்ளாட்சி தேர்தலில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் முன்னேற்பாடுகளை செய்து உள்ளனர். குறிப்பாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. மேலும் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

Next Story