மோட்டார் சைக்கிள், கார் மீது மோதிய வேன் சாலையில் கவிழ்ந்தது; வாலிபர் பலி - 4 பேர் காயம்


மோட்டார் சைக்கிள், கார் மீது மோதிய வேன் சாலையில் கவிழ்ந்தது; வாலிபர் பலி - 4 பேர் காயம்
x
தினத்தந்தி 30 Dec 2019 4:15 AM IST (Updated: 30 Dec 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் அருகே மோட்டார் சைக்கிள், கார் மீது மோதிய வேன் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற வாலிபர் பலியானார். காரில் பயணம் செய்த 4 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வெள்ளகோவில்,

கோவை, ஒண்டிப்பு தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 26). ஒண்டிப்பு தூரில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் கரூர் சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கோவை திரும்பி சென்று கொண்டிருந்தார். இவருடைய மோட்டார் சைக்கிள் நேற்று காலை 6.30 மணிக்கு கரூர்-கோவை ரோட்டில் ஓலப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கோவையில் இருந்து திருச்சி நோக்கி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.

இந்த வேன் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார்த்தி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதோடு, மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் கோவை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீதும் மோதிவிட்டு சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் நொறுங்கியது. காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற கார்த்தி மற்றும் காரை ஓட்டிய சிவசங்கர் (44), காரில் பயணம் செய்த கரூரை சேர்ந்த தியாகராஜன் மனைவி உமாமகேஸ்வரி (40), இவரது மகன் வருண்(20), மகள் பவதாரணி (12) ஆகியோரும் பலத்த காயம் அடைந்தனர்.

உடனே அருகில் உள்ளவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் கார்த்தியை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதே போல் காயம் அடைந்த சிவசங்கர், உமாமகேஸ்வரி, வருண், பவதாரணி ஆகிய 4 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story