மாவட்டத்தில் 1,162 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு 4 லட்சத்து 2 ஆயிரம் பேர் வாக்களிக்க ஏற்பாடு


மாவட்டத்தில் 1,162 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு 4 லட்சத்து 2 ஆயிரம் பேர் வாக்களிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 29 Dec 2019 11:00 PM GMT (Updated: 29 Dec 2019 8:34 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் 1,162 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று 2-ம் கட்டமாக 836 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி 4 லட்சத்து 2 ஆயிரத்து 255 பேர் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்தி, மோகனூர், எலச்சிபாளையம், எருமப்பட்டி, புதுச்சத்திரம் என 7 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதன் மூலம் 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 86 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், 158 ஊராட்சி மன்ற தலைவர்கள், 1,275 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 1,527 பேர் தேர்ந்தெடுக்கப்பட இருந்தனர். இதில் 365 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எனவே மீதமுள்ள 1,162 இடங்களுக்கு 3,579 பேர் போட்டியிடுகின்றனர்.

2,015 வாக்காளர்கள் சேர்ப்பு

இந்த தேர்தலில் 4 லட்சத்து ஆயிரத்து 526 பேர் வாக்களிக்க இருந்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடபட்ட துணை வாக்காளர் பட்டியலின்படி புதிதாக 2 ஆயிரத்து 15 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதேபோல் 1,355 பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இறுதியாக 1 லட்சத்து 96 ஆயிரத்து 101 ஆண்கள், 2 லட்சத்து 6 ஆயிரத்து 139 பெண்கள், 15 திருநங்கைகள் என மொத்தம் 4 லட்சத்து 2 ஆயிரத்து 255 பேர் வாக்களிக்க தகுதி பெற்று உள்ளனர். எலச்சிபாளையம் ஒன்றியத்தில் 335 பேரும், எருமப்பட்டியில் 327 பேரும், மோகனூரில் 393 பேரும், நாமக்கல்லில் 250 பேரும், பரமத்தியில் 142 பேரும், புதுச்சத்திரம் ஒன்றியத்தில் 380 பேரும், சேந்தமங்கலம் ஒன்றியத்தில் 188 பேரும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

பொருட்கள் அனுப்பிவைப்பு

இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள 7 ஒன்றியங்களுக்கும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து ஓட்டுப்பதிவுக்கு தேவையான அழியாத மை, மெழுகுவர்த்தி, அரக்கு, பேனா உள்ளிட்ட பொருட்கள் வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கிடையே வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நேற்று 7 ஒன்றியங்களிலும் 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அந்த பயிற்சி வகுப்பிலேயே பணிநியமன ஆணையும் வழங்கப்பட்டது. ஆணையை பெற்றுக்கொண்ட அவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்ற வாக்குப்பதிவுக்கான முன்ஏற்பாடு பணிகளை செய்தனர்.

கூடுதல் பாதுகாப்பு

மாவட்டத்தில் 2-ம் கட்டமாக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 836 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அதில் 132 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன. எனவே அந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த தேர்தல் பணியில் 6 ஆயிரத்து 740 பேர் ஈடுபட உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. அதன் பின்னர் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்படும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story