அமைச்சரவையில் கூடுதலாக பிரதிநிதித்துவம் வேண்டும்: சென்னையில் நாடார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அமைச்சரவையில் கூடுதலாக பிரதிநிதித்துவம் வேண்டும்: சென்னையில் நாடார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Dec 2019 11:15 PM GMT (Updated: 29 Dec 2019 8:39 PM GMT)

தமிழக அமைச்சரவையில் நாடார் சமுதாயத்துக்கு பிரதிநிதித்துவம் வழங்கக்கோரி சென்னையில் நாடார் சங்கங்கள், அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை,

பட்டியல் பிரிவுக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சியை மீண்டும் பொதுப்பிரிவுக்குள் கொண்டுவரவேண்டும், தமிழக அமைச்சரவையில் நாடார் சமுதாயத்துக்கு கூடுதலாக பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பனங்காட்டு படை கட்சி மற்றும் நாடார் சங்கங்கள், அமைப்புகள் சார்பில் ‘நாடார்களின் உரிமை மீட்பு’ என்ற பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அ.ஹரி நாடார் தலைமை தாங்கினார். நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன், திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் உள்பட நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

தென்னிந்திய நாடார் சங்க ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார், தமிழ்நாடு நாடார் பேரவை அமைப்பாளர் புழல் தர்மராஜ் நாடார், நெல்லை தூத்துக்குடி மகமை பரிபாலன சங்கத்தின் செயலாளர் மயிலை பி.சந்திரசேகர்,

தேசிய நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.விஜயகுமார் நாடார், ம.பொ.சி. பாஸ்கரன், ம.பொ.சி.செந்தில், போரூர் நாடார் சங்க தலைவர் வி.ஆனந்தராஜ் நாடார், காமராஜரின் பேத்தி வி.எஸ்.கமாலிகா உள்பட பல்வேறு கட்சி, அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் காமராஜர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, என்.ஆர்.தனபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கணிசமாக வசிக்கின்றனர். ஆனால் தமிழக அமைச்சரவையில் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த ஒரு அமைச்சர் தான் இருக்கிறார். ஜெயலலிதா இருந்தபோது நாடார் சமுதாயத்தை சேர்ந்த 3 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். எனவே அதுபோன்று தற்போதைய அமைச்சரவையில் மேலும் 2 அமைச்சர்களை சேர்க்க வேண்டும்.

இதேபோல ஆந்திராவில் வழங்கப்பட்டதுபோன்று துணை முதல்-அமைச்சர் பதவியும் வழங்கவேண்டும். வியாபாரத்தின் மூலம் அரசுக்கு அதிக வரி கட்டுவதும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான். தூத்துக்குடியில் நாடார் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். எனவே பட்டியல் பிரிவுக்கு மாற்றப்பட்ட, தூத்துக்குடி மாநகராட்சியை மீண்டும் பொதுப்பிரிவுக்கு மாற்றவேண்டும். நாடார் சமுதாயத்தை சேர்ந்தவரை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கவேண்டும். மேலும் நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story