பங்களாப்புதூர் அருகே, ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு - நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்


பங்களாப்புதூர் அருகே, ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு - நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 31 Dec 2019 4:15 AM IST (Updated: 30 Dec 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

பங்களாப்புதூர் அருகே நண்பர்களுடன் குளித்தபோது ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

டிஎன்.பாளையம், 

கோபி அருகே உள்ள சீதாலட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் இறந்துவிட்டார். இவருக்கு பிரபு (21), சந்துரு (18) ஆகிய 2 மகன்கள்.

இந்த நிலையில் பிரபு, சந்துரு மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவர்களுடைய நண்பர்கள் சிலர் நேற்று முன்தினம் மதியம் நஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பவானி ஆற்றுக்கு சென்றனர். பின்னர் அங்கு அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்தனர்.

இதில் சந்துரு மட்டும் ஆற்றின் ஆழமான பகுதியில் நின்று குளித்துள்ளார். மற்ற அனைவரும் ஆற்றின் கரையோரத்தில் நின்று குளித்தனர். இந்தநிலையில் சந்துரு தண்ணீரில் மூழ்க தொடங்கினார். அவருக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இதைப்பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதில் சந்துரு தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

உடனே இதுபற்றி கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று சந்துருவை தேடிப்பார்த்தனர். ஆனால் இரவு 7 மணி வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இருள் சூழ்ந்ததால் தேடும் பணி கைவிடப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் திரும்பி சென்றனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை 2-வது நாளாக தேடும் பணி நடந்தது. அப்போது சந்துரு குளித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அவர் பிணமாக மீட்கப்பட்டார்.

இதுபற்றி அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்துருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story