திருவெண்ணெய்நல்லூர் அருகே, அடகு கடை சுவரில் துளைபோட்டு ரூ.4 லட்சம் வெள்ளி பொருட்கள் கொள்ளை
திருவெண்ணெய் நல்லூர் அருகே அடகு கடை சுவரில் துளைபோட்டு ரூ.4 லட்சம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள், பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரசூர்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பாவந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி மகன் ஜெயபால் (வயது 65). இவர் அதே கிராமத்தில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மீண்டும் நேற்று காலை வந்து கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையில் இருந்த 2 பாதுகாப்பு பெட்டகங்களில் ஒரு பாதுகாப்பு பெட்டகம் மற்றும் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தது. கடையின் பின்பக்க சுவரிலும் பெரிய அளவில் துளை போடப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடையின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்த 10 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போயுள்ளதாக போலீசாரிடம் ஜெயபால் கூறினார். தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த கடையில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர்.
நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், அடகு கடையின் பின்புற பகுதி வழியாக சென்று அங்குள்ள சுவரில் துளைபோட்டு அதன் வழியாக உள்ளே நுழைந்து பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து அதில் வைத்திருந்த வெள்ளிப்பொருட்கள், பணத்தை கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது. மேலும் மற்றொரு பாதுகாப்பு பெட்டகத்தை கொள்ளையர்களால் உடைக்க முடியாததால் அதில் இருந்த தங்க நகைகள் கொள்ளை போகாமல் அதிர்ஷ்டவசமாக தப்பியது. கொள்ளை போன வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.4 லட்சமாகும்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story