வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறுத்தை தாக்கி ஊழியர் படுகாயம் உணவு வைத்தபோது விபரீதம்


வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறுத்தை தாக்கி ஊழியர் படுகாயம் உணவு வைத்தபோது விபரீதம்
x
தினத்தந்தி 30 Dec 2019 10:00 PM GMT (Updated: 30 Dec 2019 7:26 PM GMT)

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் உணவு வைத்தபோது, சிறுத்தை தாக்கியதில் ஊழியர் பலத்த காயமடைந்தார்.

வண்டலூர்,

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா எதிரே விலங்குகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. இந்த மறுவாழ்வு மையத்தில் சர்க்கஸில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்ட சிங்கங்கள், புலிகள், கரடி, சிறுத்தை மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பல்வேறு விலங்குகள் உள்ளிட்டவை வண்டலூர் பூங்கா நிர்வாகத்தால் சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் பராமரிப்பு பணிகளில் தினமும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு மறுவாழ்வு மையத்தில் பராமரிப்புப் பணியில் இருந்த ஊழியர் பழனி (வயது 53), என்பவர் கூண்டிற்கு வெளியே இருந்தப்படி சிறுத்தைக்கு மாமிச உணவு வைத்தார்.

அப்போது திடீரென ஆக்ரோஷம் அடைந்த சிறுத்தை அவரது கையை கடித்து இழுத்து பலமாக தாக்கியது. இதனால் வலியால் ஊழியர் பழனி பயங்கர சத்தத்துடன் அலறினார்.

இதனைப் பார்த்த அங்கிருந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக சுதாரித்துக்கொண்டு பழனியை சிறுத்தையிடம் இருந்து காப்பாற்றினார்கள். இதில் பழனியின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சக ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு பழனியை மீட்டு ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு பழனிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் பூங்கா ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story