சிங்காநல்லூரில், வியாபாரி வீட்டில் 14 பவுன் நகை திருட்டு - வேலைக்கார பெண் கைது
சிங்காநல்லூரில் வியாபாரி வீட்டில் 14 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை,
கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 48). இவர் கோவை சாய்பாபாகாலனியில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால் யுவராஜின் குடும்பத்தினர் வெளியூர் சென்றனர். அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இவர் சம்பவத்தன்று தான் அணிந்திருந்த 14 பவுன் செயினை கழற்றி, படுக்கை அறையில் உள்ள கட்டிலில் தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு படுத்து உறங்கினார். மறுநாள் காலை எழுந்து குளித்துவிட்டு வந்தார். பின்னர் தலையணையை எடுத்து பார்த்தபோது 14 பவுன் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த அறை முழுவதும் தேடியபோதும் கிடைக்கவில்லை.
உடனே அவர் வீட்டில் இருந்த வேலைக்கார பெண்ணிடம் கேட்டார். ஆனால் அவர் தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறினார். ஆனால் அவர் மீது யுவராஜிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து யுவராஜ் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலைக்கார பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.அதில் அவர் வெள்ளலூரை சேர்ந்த அன்னபூரணி (43) என்பதும், யுவராஜ் குளிப்பதற்காக சென்றபோது தலையணைக்கு கீழ் இருந்த 14 பவுன் நகையை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அன்னபூரணியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story