கோவையில் செல்லாத நோட்டுகள் மூலம் பலகோடி ரூபாய் மோசடி: தலைமறைவான தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு


கோவையில் செல்லாத நோட்டுகள் மூலம் பலகோடி ரூபாய் மோசடி: தலைமறைவான தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 30 Dec 2019 10:00 PM GMT (Updated: 30 Dec 2019 7:47 PM GMT)

கோவையில் செல்லாத நோட்டுகள் மூலம் பலகோடி ரூபாய் மோசடி செய்த சம்பவத்தில் தலைமறைவான தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் என்று போலீசார் அறிவித்து உள்ளனர்.

வடவள்ளி,

கோவையை அடுத்த வடவள்ளி பொம்மனாம்பாளையம் லட்சுமி நகரில் தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான சொகுசு பங்களா உள்ளது. இந்த பங்களாவை உக்கடத்தை சேர்ந்த ரஷீத், ஷேக் ஆகியோர் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். அவர்களிடம் உக்கடத்தை சேர்ந்த பெரோஸ் என்பவர் வேலை செய்து வந்தார்.

இவர்கள் 3 பேரும் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை தாங்கள் பெற்றுக்கொள்வதாகவும், இந்த நோட்டுகளுக்கு பதிலாக தற்போது புழக்கத்தில் உள்ள புதிய ரூபாய் நோட்டுகளை கொடுப்பதாகவும் அறிவித்தனர். மேலும் புதிய 2,000 மற்றும் 500 ஐ பெற்றுக் கொண்டு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து உள்ளனர். மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், புதிய ஆட்சி வந்ததும் பழைய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்து விடும் என்றும் கூறினார்கள். இதை நம்பி ஏராளமானோர் அவர்களை தொடர்பு கொண்டனர்.

அத்துடன் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் தினமும் இந்த பங்களாவுக்கு வந்து சென்றனர். ஏராளமான சொகுசு கார்களும் வந்து சென்றதாக தெரிகிறது. இதை அறிந்த மத்திய புலனாய்வு பிரிவு போலீசார், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவருடைய உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் கடந்த 28-ந் தேதி அந்த சொகுசு பங்களாவுக்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு கட்டுக்கட்டாக ஏராளமான செல்லாத ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

இதை அறிந்த வருமானவரித்துறை அதிகாரிகளும் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது ரூபாய் நோட்டுக்கட்டில் மேல் பகுதியில் மட்டும் செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. உள்பகுதியில் அந்த ரூபாய் நோட்டு அளவுக்கு வெட்டப்பட்ட காகிதங்கள் இருந்தன. அவை அனைத்தும் கைப்பற்றப்பட்டன.

இதை அறிந்த அந்த பங்களாவின் உரிமையாளர் ஆனந்தன், மற்றும் அங்கு வாடகைக்கு இருந்த ரஷீத், ஷேக் மற்றும் பெரோஸ் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் 50 ஆயிரம் ரூபாய் வாங்கினால் அதற்கு ரூ.1 லட்சத்துக்கு செல்லாத ரூபாய் நோட்டுகளை கொடுத்தது தெரியவந்தது.

இது தொடர்பாக ஆனந்தன், ரஷீத் உள்பட 4 பேர் மீது வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் தலைமறைவான 4 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அந்த 4 பேரின் செல்போன் எண்ணை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இவர்கள் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்து உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம் என்று போலீசார் அறிவித்து உள்ளனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

ரஷீத், ஷேக், பெரோஸ் ஆகியோருக்கு பணத்தை மாற்றி கொடுப்பதில் கேரளாவை சேர்ந்த பிரமுகர் ஒருவர் உடந்தையாக செயல்பட்டு உள்ளார். அந்த நபர் யார் என்பது தெரியவில்லை. இவர்களிடம் தொடர்பு கொள்பவர்களிடம், இன்னும் 2 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது செல்லாது என்று அறிவித்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துவிடும்.எனவே இப்போதே நாங்கள் ரகசியமாக செல்லாத ரூபாய் நோட்டுகளை முக்கிய பிரமுகர்களுக்கு கொடுத்து வருகிறோம். எங்களிடம் கட்டுக்கட்டாக பலகோடிக்கு அந்த ரூபாய் நோட்டுகள் உள்ளன என்று கூறி உள்ளனர். இதற்காக சிலர் முகவர்களாகவும் செயல்பட்டு வந்து உள்ளனர்.

சிலர் ரூபாய் நோட்டுகள் அவர்களிடம் இருப்பதை நம்பவில்லை. கோடிக்கணக்கில் செல்லாத ரூபாய் நோட்டுகளை வாங்குபவர்கள், அவர்களிடம் இருக்கும் செல்லாத ரூபாய் நோட்டுகளை பார்க்க வேண்டும் என்றால் கூடுதலாக ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும். நேரில் பார்க்க வேண்டும் என்றால் ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும். அதுவும் பணத்தை பதுக்கி வைத்து இருந்த ரகசிய அறைக்குள் அழைத்துச்செல்ல மாட்டார்கள். அந்த அறையின் ஜன்னல் வழியாகதான் ரூபாய் நோட்டுகளை காண்பிப்பார்கள்.

இந்த நூதன மோசடியை அரங்கேற்ற செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள் அளவுக்கு காகிதத்தை வெட்டி, மேல் பகுதி மற்றும் கீழ்ப்பகுதியில் மட்டும் ரூபாய் நோட்டுகளை வைத்து உள்ளனர். உள்பகுதியில் காகிதம் மட்டும் இருக்கும். பணம் கொடுத்து வாங்குபவர்களிடம் பண்டல், பண்டலாக ரூபாய் நோட்டுகளை கட்டி, வெளியே தெரிந்தால் போலீசார் கைது செய்துவிடுவார்கள், வீட்டிற்கு சென்றுதான் திறந்து பார்க்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

இதை நம்பியவர்கள் செல்லாத ரூபாய் நோட்டுகளை பெற்றதும் பண்டலை உடைத்து பார்க்கவில்லை. வீட்டிற்கு சென்று பார்க்கும்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து உள்ளனர். இவ்வாறு ஏராளமானோரிடம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. செல்லாத ரூபாய் நோட்டுகளை வாங்கினால் போலீசார் தங்களை கைது செய்து விடுவார்கள் என்பதால் யாருமே போலீசில் புகாரும் செய்யவில்லை.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ஷைன் என்பவர் இவர்களிடம் ரூ.5 கோடி கொடுத்து ஏமாந்து உள்ளார். எனவே தலைமறைவான 4 பேரை பிடித்தால் மட்டுமே எத்தனை பேரிடம், எவ்வளவு மோசடி செய்து உள்ளனர் என்பது தெரியவரும். எனவே அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். மேலும் இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தாராளமாக புகார் தெரிவிக்கலாம். யாரும் பயப்பட வேண்டாம்.

இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

Next Story