ஊஞ்சலூர் அருகே நர்சு தூக்குப்போட்டு் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது


ஊஞ்சலூர் அருகே நர்சு தூக்குப்போட்டு் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2019 4:30 AM IST (Updated: 31 Dec 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

ஊஞ்சலூர் அருகே தூக்குப்போட்டு நர்சு இறந்தார். தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஊஞ்சலூர், 

நாமக்கல் மாவட்டம் ஓடுவான்குறிச்சியை சேர்ந்தவர் மாதேஷ்வரன் (வயது 42). ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள பழனிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ஜோதிமணி (35). இவரும் மாதேஷ்வரனும் திருமணம் ஆகி பழனிக்கவுண்டன்பாளையத்தில் வசித்து வந்தனர். ஜோதிமணி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று மாலை ஜோதிமணி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது அவருக்கும் மாதேஷ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த ஜோதிமணி வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு் தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மலையம்பாளையம் போலீசார் அங்கு சென்று ஜோதிமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அவரது உடல் அங்கு நேற்று முன்தினம் காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடலை போலீசார் அவரது உறவினர்களிடம் கொடுக்க சென்றனர். ஆனால் அவர்கள் ஜோதிமணியின் உடலை வாங்க மறுத்தனர்.

ஜோதிமணியின் சாவுக்கு மாதேஷ்வரன் தான் காரணம். எனவே அவரை கைது செய்தால் தான் உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது உறவினர்கள் கூறும்போது, ‘மாதேஷ்வரனிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். இதையடுத்து போலீசார் மாதேஷ்வரனிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஜோதிமணியிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்ததும், இதனால் மனம் உடைந்த ஜோதிமணி தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிமணியை தற்கொலைக்கு தூண்டியதாக மாதேஷ்வரனை கைது செய்தனர். பின்னர் அவர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதாக ஜோதிமணியின் உறவினர்கள் சிலர் மீது கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story