வாக்கு எண்ணும் மைய அடையாள அட்டை வாங்குவதில் தகராறு: மன்னார்குடி ஒன்றிய ஆணையர் அலுவலக பொருட்கள் சூறை


வாக்கு எண்ணும் மைய அடையாள அட்டை வாங்குவதில் தகராறு: மன்னார்குடி ஒன்றிய ஆணையர் அலுவலக பொருட்கள் சூறை
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 8:00 PM GMT)

மன்னார்குடியில் வாக்கு எண்ணும் மைய அடையாள அட்டை வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஆணையர் அறையில் உள்ள பொருட்கள் சூறையாடப்பட்டன. இதுகுறித்து தி.மு.க.வினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு கடந்த 27-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது. இதையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசினர் கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு உள்ளது. வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அலுவலராக ஒன்றிய ஆணையர் எஸ்.ஞானம் செயல்பட்டு வருகிறார்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது, வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் சென்று வருவதற்கான அடையாள அட்டை மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை முதல் வழங்கப்பட்டு வந்தது. வேட்பாளர்கள் தங்களுடைய முகவர்களுடன் வந்து, ஆவணங்களை சமர்ப்பித்து அடையாள அட்டையை பெற்று சென்றனர்.

வாக்குவாதம்

இந்த நிலையில் நேற்று மாலை தேர்தல் அலுவலர் ஞானம் தனது அறையில் முகவர் அடையாள அட்டையை கொடுத்து கொண்டு இருந்தார். அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த தங்கமணி வரிசையில் நிற்காமல் நேரடியாக வந்து தேர்தல் அலுவலர் ஞானத்திடம் ஏதோ சந்தேகம் கேட்டு விட்டு சென்றார்.

அப்போது வரிசையில் காத்திருந்த தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளரும், 4-வது வார்டு ஊராட்சி ஒன்றிய குழுவுக்கு போட்டியிடும் வேட்பாளருமான ஐ.வி.குமரேசன், நாங்கள் வரிசையில் காத்திருக்கும்போது எப்படி பின்னால் வந்தவருக்கு அடையாள அட்டையை கொடுக்கிறீர்கள் என கூறி, ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பொருட்கள் சூறை

அதற்கு முகவர் அடையாள அட்டை எதுவும் கொடுக்கவில்லை என தேர்தல் அலுவலர் ஞானம் விளக்கம் அளித்தார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத குமரேசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஆணையர் அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை சூறையாடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் தகராறில் ஈடுபட்ட தி.மு.க. வினரை வெளியேற்றினர்.

இதனிடையே சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.

போலீசில் புகார்

பின்னர் தேர்தல் அலுவலர் ஞானம் நிருபர்களிடம் கூறியதாவது:-

முகவர் அடையாள அட்டை கேட்கும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வரிசைப்படியே வழங்கி வரும் நிலையில், அதனை புரிந்து கொள்ளாமல், குமரேசன் மற்றும் அவரது ஆதரவாளர் ஜெகதீஸ் உள்ளிட்டவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டனர்.அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி துறை சங்கத்தினருடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தகராறில் ஈடுபட்ட தி.மு.க.வினர்் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் அலுவலகத்தை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ஒன்றிய அலுவலக வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல ஒன்றிய அலுவலக வாசலில் கூடிய அ.தி.மு.க.வினர், தி.மு.க.வினரை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story