பல்பொருள் அங்காடி உரிமையாளர் வீட்டில், 6½ பவுன் நகை, மடிக்கணினி திருட்டு


பல்பொருள் அங்காடி உரிமையாளர் வீட்டில், 6½ பவுன் நகை, மடிக்கணினி திருட்டு
x
தினத்தந்தி 30 Dec 2019 10:30 PM GMT (Updated: 30 Dec 2019 8:06 PM GMT)

திண்டுக்கல் அருகே பல்பொருள் அங்காடி உரிமையாளர் வீட்டில் 6½ பவுன் நகை மற்றும் மடிக்கணினியை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குள்ளனம்பட்டி,

திண்டுக்கல் அருகே உள்ள பொன்னகரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 48). இவர் தனது வீட்டின் முன்பக்க பகுதியில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இவர் கடந்த 28-ந்தேதி மனைவி சந்தானலட்சுமி (37), மகன் மோனி‌‌ஷ் (20), மகள் நிகிதாலட்சுமி (14) ஆகியோருடன் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த நகை மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றனர்.இந்நிலையில் நேற்று அதிகாலை 1 மணியளவில் முருகானந்தம் குடும்பத் தினருடன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 6½ பவுன்நகை மற்றும் மடிக்கணினி ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் முருகானந்தம் புகார் செய்தார். அதன்பேரில் ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)தெய்வம், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story