நாகை மாவட்டத்தில் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலில் விறு, விறுப்பான வாக்குப்பதிவு


நாகை மாவட்டத்தில் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலில் விறு, விறுப்பான வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 8:26 PM GMT)

நாகை மாவட்டத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் விறு, விறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் நாகை, திருமருகல், கீழ்வேளூர், சீர்காழி, செம்பனார்கோவில், கொள்ளிடம், தலைஞாயிறு, கீழையூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக நாகை, திருமருகல், கீழ்வேளூர், சீர்காழி, செம்பனார்கோவில், கொள்ளிடம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 27-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.

தலைஞாயிறு, கீழையூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதில் ஆண்களை விட பெண்களே ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் வாக்குப்பதிவு விறு, விறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் தங்களது வாக்குகளை நீண்ட வரிசையில் நின்று செலுத்தினர். முதல் முறையாக இளம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை மகிழ்ச்சியுடன் செலுத்தி ஜனநாயக கடமையாற்றினர். தள்ளாத வயதிலும் முதியவர்கள் தங்கள் உறவினர்களின் உதவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.

1,200 போலீசார் பாதுகாப்பு

2-ம் கட்டமாக நேற்று 192 ஊராட்சி தலைவர் பதவிக்கும், 1,542 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கும், 98 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 10 மாவட்ட ஊராட்சி வார்டு பதவிக்கும் என மொத்தமாக 1,842 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 897 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 76 வாக்குச்சாவடிகள் பதற்றமானது என கண்டறியப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளை நுண்பார்வையாளர்கள், வெப்கேமரா, வீடியோ கிராபர் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த 2-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 6 ஆயிரத்து 923 அலுவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். வாக்குப்பதிவின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையில் 11 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 34 இன்ஸ்பெக்டர்கள், 80 சப்-இன்ஸ்பெக்டர்கள், 800 போலீசார், 350 ஊர்க்காவல் படைவீரர்கள், 50 ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் என 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ராகு காலம்

நாகை மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தநிலையில் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் என்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் 7.30 மணிக்கு முன்னதாகவே தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.


Next Story